வியாழன், 28 ஜூன், 2012

அண்ணா சாலை ஆக்சிடெண்ட் கற்றுத் தந்த பாடம் என்ன?


நேற்று சென்னையில் ஜெமினி மேம்பாலத்தில் நடந்த பஸ் விபத்தைப் பற்றி நீங்கள் இன்னமும் அறியாமல் இருந்தால் உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கௌன்ட் இல்லை என்று அடித்து சொல்லி விடலாம். 

நேற்று ஒவ்வொரு தமிழனும் சாப்பிட மறந்தாலும் இந்த விஷயத்தை ஷேர் செய்தோ அல்லது லைக் செய்தோ "ஓட்டுனரின் கவன குறைவே காரணம்" என்றோ , " தரமற்ற பேருந்துகளை கொடுத்த அரசே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றோ , "அச்சச்சோ எவ்ளோ பேருக்கு அடி பட்டுச்சு? " என்றோ தங்களது கோபங்களையும், பரிதாபங்களையும் பதிவு செய்து தங்களுக்கும் சமுக நலனில் அக்கறை உள்ளது என்று தெரிவித்துக்  கொண்டதை பார்க்க முடிந்தது.

இந்த விபத்துக்கு காரணமாக பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. அதை
அலசி ஆராய்வது அல்ல இப்பதிவின் நோக்கம். முக்கியமான காரணமாக கூறப்படுவது "டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு வண்டியை ஓட்டியதால் ஏற்பட்ட கவனக் குறைவே" என்பதே. இதில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது என்பதை அப்பேருந்தில் பயணித்த சிலரோ அல்லது டிரைவரோ வாக்குமுலம் அளிக்கும் போது தான் தெரிய வரும். ஆனால் இது காரணமாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே இதுவரை வெளி வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் இதைப் பார்த்து கொந்தளித்து "மாநகர பேருந்து டிரைவர்கள் பணிக்கு செல்லும் போது செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் மிகப் பெரிய தண்டனை அளிக்க வேண்டும்" என்று நிறைய சமூக ஆர்வலர்கள் போர்க் கொடி உயர்த்துவது சந்தோஷமான விஷயம் என்றாலும் அதை அவர்கள் தங்களது வாழ்கையில் தங்களது சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது பின் பற்றுகிறார்களா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அத்தகையவர்களை விமர்சினம் செய்யும் எண்ணமும் இப்பதிவிற்கு இல்லை.இதற்கான பதிலை அவர்களே அவர்கள் மனசாட்சியிடம் பதில் அளித்துக் கொள்ளட்டும்.

ஆனால் ஒன்று நிச்சயம் செல்போன்  பேசிக்  கொண்டு  வாகனம்  ஓட்டும் அனைவருக்கும் இது ஒரு சவுக்கடி. ஒரு நொடியேனும் அவர்களைக் குற்ற உணர்வு தாக்கி மறுநிமிடமே மறந்தும் இருக்கலாம். ஆனால் இதன் பாதிப்பால் திருந்துபவர்  யார் என்று  யோசித்தால் அந்த  டிரைவரும் அவர்களின்  குடும்பமும்  மட்டுமே என்பது தான் நிதர்சன உண்மை.அதற்காக   அவர்கள் கொடுத்த விலை தான் அதிகம்.

இவ்விபத்து நடந்த சில நிமிடங்களியே, தனது டூ வீலரை ஒட்டியபடி "மச்சான் 17M டிரைவர் செல்போன் பேசிட்டு பிரிட்ஜ்ல விட்டுட்டனாமே?" என்று செல்போனில் கதைத்த படி செல்லும் இளம் வயதினரையும்....
"சொல்லு செல்லம்...வீட்டுக்கு வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடறேன்" என்று செல்போனைப் பாக்கெட்டில் வைத்தவாறே திரும்பி தனது கஸ்டமரிடம் "நீங்க சொல்றது கரெக்ட் சார், அந்த பஸ் டிரைவர் ஐ லாம் வேலையை விட்டே தூக்கிடனும்" என்று சொல்லும் ஆட்டோ டிரைவர்களையும் பார்த்து கொண்டே தான் இருக்க போகிறோம் என்னும் போது மனம் வலிக்கிறது. அவர்களை சாடுவதற்காக எழுதிய பதிவும் இல்லை இது!

அப்போ இந்தப் பதிவிற்கு என்ன தான் காரணம் என்று பொறுமை இழந்து கேட்டும் நண்பர்களே. நான் சில நாட்களுக்கு முன் செல்போனால் விபத்தில் முடிவதைப்  பற்றிய ஒரு வீடியோ பார்த்தேன். அன்று முதல் செல்போனை டிரைவர் சீட்-இல் இருக்கும் போது தொடுவதே இல்லை. அந்த அளவிற்கு என்னை பாதித்த வீடியோவை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் கொடுரமான வீடியோ அதனால் viewers discretion is recommended.


இந்த பதிவைப் பார்க்கும் என் நண்பர்களில் ஒருவரேனும் இனி வண்டி ஓட்டும் போது செல்போனை தொடுவதில்லை என்று முடிவெடுத்தால் அதை விட சந்தோசம் எனக்கு வேறு எதுவும் இருக்காது. என் சந்தோசத்திற்கான சுயநலமே இப்பதிவின் நோக்கம்!

கருத்துகள் இல்லை: