வியாழன், 21 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 3.



பாகம் -1பாகம் -2பாகம் - 4பாகம் - 5பாகம் - 6

அடுத்த நாள் காலை,  வேலையை பார்த்துக் கொண்டு இருந்த போது ஜென்னி எங்களது கேபின் நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்குள் படபடப்பு அதிகமாகியது. மதன் ஜென்னியைப் பார்த்ததும் "ஹலோ " என்று கூறி புன்னகைத்தான். அதற்கு அவளூம் பதிலாக புன்னகை புரிந்தாள்.

"என்ன பிகருடா இவ!!!" என்று அவன் தனக்குள் முணுமுணுக்க, நான் அவனை முறைத்தேன்.  "பாம்பு காதுடா உனக்கு " என்று கூறிவிட்டு, என் முறைப்பில் இருந்து தப்ப அவனது மானிட்டரில் ஆழ்ந்தான்.

ஜென்னி உஷாவிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்தி விட்டு பேச ஆரம்பித்தாள். என் மனதிற்குள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள தோன்றிய ஆர்வத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு என் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இருந்தாலும் இருவரும் சிரித்து சிரித்து பேசுவது என் காதில் விழாமல் இல்லை. ஆனாலும் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாகக் கேட்கவில்லை. என்னிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று ஜென்னியை சைட் அடிக்கும் எண்ணத்துடன் மதன் திரும்பி பார்க்க, ஜென்னி என்னை ஒரக் கண்ணால் அடிக்கடி பார்ப்பதை அறிந்து கொஞ்சம் அதிர்ந்தான். அவன் மூளை நான் நேற்று கோபமாகப் பேசியதையும், இதையும் இணைத்து வேகமாகக் கணக்கிட ஆரம்பித்தது. ஏதோ தோன்றியவனாக அவன் என்னைத் திரும்பி பார்க்க, நான் காரியமே கண்ணாக மானிட்டரில் ஆழ்ந்திருந்தேன். ஜென்னித் திரும்பி செல்வதும், உஷா என்னை நோக்கி வருவதையும், அவர்களது காலணி எழுப்பிய ஒலியில் புரிய, வேலையில் இன்னும் கவனமாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயற்சித்தேன்.

என்னிடம் வந்த உஷா, "சூரி, நீ பிஸியா இருக்கியா?" என்று கேட்டாள்.

மானிட்டரில் இருந்து என் விழியை அகற்றாமலேயே, "ஆமா, என்ன வேணும்" என்று கேட்டேன். எனது சேரைப் பிடித்து அவள் பக்கம் திருப்பி விட்டு

"அய்யாவுக்கு, என்ன வேணும்னு திரும்பி கேக்க கூட நேரம் இல்லை..அவ்ளோ பிஸியா?? " என்றாள்.

அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக அளித்து விட்டு, "ஒகே, சொல்லு என்ன வேணும்" என்றேன்.

"ஜென்னிக்கு அவளோட ப்ராஜெக்ட் போல்டர் செட் பண்ண ஹெல்ப் வேணுமாம். நீ தான் அதுல எக்ஸ்பர்ட்னு ஆச்சே, நீ ஃப்ரீயா இருக்கும் போது பண்ணித் தரயா? " என்று கேட்டாள்.

அதற்கு நான், "இல்லை உஷா, I have lot of stuffs to finish today. என்னால முடியாது " என்றேன். உண்மையிலேயே பெரிதாக வேலை இல்லை என்றாலும் பொய் சொன்னேன்.

உடனே உஷா, "ஹே just 10 minutes எனக்காக ப்ளீஸ் " என்றாள்.

"சாரி உஷா, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. இன்னைக்கு நான் இந்த ரிப்போர்ட்ஸ் அனுப்பலைனா பெரிய level la Escalate ஆயிடும்" என்று பொய்யை மெய்பிக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். தொடர்ந்து, "இதோ இவன் வெட்டியா தானே இருக்கான், இவனை அனுப்பு " என்றேன் மதனைக் காட்டி. 

மதனுக்கு ஆச்சர்யாக இருந்தது. ஜென்னி பேரை உஷா சொன்னதுமே நான் உதவ உடனே தயாராக இருப்பேன் என்று நினைத்தான். ஆனால் நான் மறுத்தது அவனுக்கு என் மேல் ஆச்சர்யத்துடன் சந்தேகத்தையும் சேர்த்து கிளப்பியது. இருந்தாலும் ஒரு அழகிய பெண்ணுக்கு உதவ கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் 

"Yeah, I can help her" என்று அவன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

அதற்கு உஷா அவனைப் பார்த்து, " ஒரு பொண்ணைப் பார்த்தாப் போதுமே, ஜொள்ளு விட்டுட்டு கிளம்பிடுவேயே!! நீ உக்காரு" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 

"டே, இது டெவலப்மெண்ட் சம்பந்தமான வேலை, அவனுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? உனக்கு மட்டும் தான் தெரியும். நீ ஹெல்ப் பண்ணுடா ப்ளீஸ். அவ ரொம்ப நல்லா பழகறா. நல்ல பொண்ணா தெரியறா, நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேனு ப்ராமிஸ் பண்ணிட்டேன்..எனக்காக சூரி ப்ளீஸ் " என்றாள்.

உடனே மதன் " யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குது. அதோட தலைவிதியை யாரால மாத்த முடியும்" என்று முணுமுணுத்தான். நான் அவனை முறைத்தேன். உஷாவுக்கு சரியாக கேக்காததால், 

"என்ன" என்று கேட்டாள். 

நான் உடனே, "விடு கடுப்பிலே ஏதோ உளர்றான், சரி உனக்காக நான் அவளுக்கு ஹெல்ப் பண்றேன்." அந்த "உனக்காகவை" கொஞ்சம் அழுத்திச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த பத்தாவது நிமிடம், நான் எனது இருக்கைக்கு திரும்பி வர, உஷா இருக்கையில் இல்லை. மதன் மட்டும் தான் தனியாக இருந்தான். என்னைப் பார்த்ததும்

"சார், எல்லாம் நீங்க நினைக்கிற படியே நல்லா நடக்குதா? "என்று நக்கலாகக் கேட்டான். நான் அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல் எனது இருக்கையில் அமர்ந்தேன். அவனே தொடர்ந்தான்.

"எனக்கு எல்லாம் புரியற மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. ஆனா நீ நல்லாவே நடிக்கறடா " என்றான். நான் அவன் எதைப் பத்திப் பேசுகிறான் என அறிந்தும் புரியாதது போல அவனைப் பார்த்து விட்டு

"நீ என்ன பேசறேனு எனக்கு புரியலை மதன். எனிவே, எனக்கு நிறைய வேலை இருக்கு. வெட்டிப் பேச்சை அப்புறமா வைச்சுக்கலாம் " என்று என் மானிட்டரில் கவனம் செலுத்த, மதன் எனது இருக்கை நோக்கி வந்து எனது மானிட்டரை அணைத்தான்.

"உஷாவை ஏமாத்துன மாதிரி என்னையும் ஏமாத்த முடியாது சூரி. நீ காலைல வந்ததுமே அந்த ரிப்போர்ட் ஐ அனுப்பிட்டேனு எனக்குத் தெரியும். சரி நான் நேராவே விசயத்துக்கு வரேன். உனக்கும் ஜென்னிக்கும் நடுவிலே என்ன நடக்குது? " என்று கேட்டான்.

நான், "எனக்கும் அவளுக்கும் நடுவிலயா?? ஓ மை காட்.. உனக்கு மறை கழண்டுடிச்சுனு நினைக்கிறேன். வா போய் கூலா ஏதாச்சும் சாப்பிவோம், உன் பித்தம் அப்பவாச்சும் தெளியுதானு பார்ப்போம் " பேச்சை வேறு திசையில் கொண்டு செல்ல முயன்றேன்.

"நடிக்காத சூரிஎதுவும் இல்லைனா, நீ அவளைப் பத்தி தப்பா பேசுனதும் எதுக்கு கோபப் பட்டே? அவள் உன்னை ஆயிரம் தடவை யாருக்கும் தெரியாம பார்த்தாளே அதுக்கு என்ன அர்த்தம்? உஷாக்கு உன் மேல doubt வரக் கூடாதுனு ஜென்னிக்கு ஹெல்ப் பண்ண interest ஏ இல்லாத மாதிரி நடிச்சியே அதுக்கு என்ன அர்த்தம்?" கேள்விக் கணைகளால் துளைத்தான்

"மதன் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நீயாவே எதை எதையோ முடிச்சு போட்டு கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை " ஒட்டாமல் பதில் அளித்து விட்டு எனது மானிட்டரை ஆன் செய்தேன்.

அதற்கு மதன் மறுபடி எனது மானிட்டரை ஆப் செய்து விட்டு "சூரி எனக்கு பதில் தெரிஞ்சாகணும், நீ என் கிட்ட இருந்து அவ்ளோ ஈசியா தப்பிக்க முடியாது" என்றான்.

"மதன்..You are seriously F*&^%$#@ irritating me..எங்களுக்குள்ளே எதுவும் இல்லை.அப்படி இருந்தாலும் நான் உன் கிட்ட எல்லாமே சொல்லணும்கிற அவசியம் இல்லை" கொஞ்சம் சூடாகவே பதில் அளித்து விட்டு எனது மானிட்டரை மீண்டும் ஆன் செய்தேன். அவன் என்னிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. ஏதோ சொல்ல வாய் திறக்கையில் உஷா நுழைவதைப் பார்த்து அமைதியானான்.

"சூரி சீக்கிரம் வெளியே வா, நான் உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தேன்ல ஒரு கார் சூப்பரா இருக்கு, அதே மாதிரி காரை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கனும்னு..அந்த கார் வெளியே நிக்குது, உனக்கு காமிக்கிறேன். மதன் நீயும் வா" என்று ஒரு குழந்தைப் போல உற்சாகத்துடன் என் கையைப் பிடித்து இழுத்து சென்றாள். 

அப்போது மதன் என்னைப் பார்த்த பார்வை "இவளை ஏமாத்த உனக்கு எப்படிடா மனது வந்துச்சு" என்று சொல்வது போல இருந்தது. அவனது பார்வையை சந்திக்க இயலாமல் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உஷாவைப் பின் தொடர்ந்தேன்.

-தொடரும்.

கருத்துகள் இல்லை: