ஞாயிறு, 17 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 1.




பாகம் - 2பாகம் - 3 , பாகம் - 4,  பாகம் - 5பாகம் - 6

"குட் மார்னிங் ரிஷி " - எனது கணினியில் மூழ்கியிருந்த என்னை அந்த அழகிய குரல் கலைத்தது. ரிவால்விங் சேரில் அப்படியே சுழன்று பின் பக்கம் பார்த்தேன். உஷா அவளுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன் எங்களின் கேபினுக்குள் வந்து கொண்டு இருந்தாள். ஒரு நிமிடம் அவளது அழகை பார்த்தவுடன் அப்படியே மெய் மறந்து நின்றேன். அவளை விழுங்கி விடுவது போல பார்த்த என் பார்வை போகும் இடம் அறிந்து அவள் கன்னங்கள் சிவந்து அவளை மேலும் அழகாக காட்டியது. 

அவள் இருக்கையில் அமர்ந்து தனது கணினியை உயிர்ப்பித்து கொண்டே, போதும் பார்த்தது என்பது போல சைகை காமித்து விட்டு, மறுபடியும் 

"குட் மார்னிங் ரிஷி " என்றாள், "ரிஷி " யில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து. 

ஒரு புன்னகையை பதிலாக உதிர்த்து விட்டு "நீயும் ஆரம்பிச்சிட்டியா?" என்று கேட்டேன். 

அருகில் இருந்த மதன், "ரிஷியா??! சூரி எப்போ உன் பேரை மாத்தினே?"

"நீ வேற ஏன் டா? அவளுக்கு வேற வேலை இல்லை, ஏதோ உளரிட்டு இருக்கா" - என்றேன் சூரி என்று அழைக்கப்படும் சூர்ய பிரகாஷ் ஆகிய நான்.

அப்போது உஷா குறுக்கிட்டு, "நேத்து நான் சூரி வீட்டுக்கு போய் இருந்தப்ப அவங்க வீட்டுக்கு வந்திருந்த Relative அவனை ரிஷினு கூப்பிட்டாங்க, என்ன மேட்டர்னு விசாரிச்சா கொஞ்ச வருசத்துக்கு முன்னால  சன் டிவில டீலா நோ டீலானு ஒரு ப்ரொக்ராம் வந்துட்டு இருந்திச்சு. அதுல வர ரிஷி, நம்ம சூரி மாதிரியே இருப்பானாம். அதனால அவங்க  வீட்டுல அவனை ரிஷினு தான் கூப்பிடுவாங்களாம்"

உடனே, மதன் என்னை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, உஷாவை கேள்விக் குறியுடன் நோக்கினான். அந்த பார்வை. "எனக்கு அப்படித் தோணலையே" என்று சொல்வது போல இருந்தது.

உஷா மதனிடம் மெதுவான குரலில், "எனக்கும் அப்படித் தோணலை, ஆனா நம்ம ஆளுக்கு, அவனைப் பிடிக்காது, அதனால சும்மா கடுப்பேத்தத் தான் அப்படி கூப்பிடறேன்"

உடனே மதன் சத்தமாக. "ஒ..யா..கொஞ்சம் உத்து பார்த்தா எனக்கும் அப்படி தான் தெரியுது" என்றான்.

தொடர்ந்து " மிஸ்டர் ரிஷி, நாளைக்கு புதுசா ரெண்டு பேரு நம்ம டீம்ல ஜாயின் பண்றாங்க. அந்த மாங்கா மண்டை மேனேஜர், என்னை அவங்களுக்காக ஒரு மீட்டிங் Arrange பண்ண சொல்லி இருக்கான். ஆனா நாளைக்கு காலைல என் ஆளோட படத்துக்கு வரேனு கமிட் பண்ணிட்டேன், மதியம் தான் ஆபிஸ் வருவேன். நீ நாளைக்கு எனக்கு பதிலா மீட்டிங் போனா. நான்  இந்த சனிக்கிழமை உனக்கு பதிலா ப்ராஜெக்ட் சப்போர்ட் பண்றேன். டீலா நோ டீலா" என்றான்.

அவனை கோபமாக முறைத்து, "அந்த டேஷ் டேஷ் பய பேரை சொல்லி ஹெல்ப் கேக்கரே, கண்டிப்பா நோ டீல்" என்றேன். 

உடனே மதன் ஒரு அசட்டு சிரிப்புடன், "மச்சி நாளைக்கு வர டீம்ல ஒரு சூப்பர் பிகரு இருக்குனு கேள்வி பட்டேன், உனக்கு லக் இல்லை போல, நான் வேற யாராச்சும்…"

அவன் முடிக்கும் முன் குறுக்கிட்டு "டீல்" என்றேன். 

என் கையில் ஒரு குத்து விட்டவாறே "நோ டீல்" என்றாள் உஷா. 

மதனை பார்த்து ஒரு கோப பார்வையுடன் "உன் லவ்வரோட எஞ்சாய் பண்ணு. வேண்டாம்னு சொல்லலை, ஆனா அதுக்கு என் லவ்-க்கு ஏன் ஆப்பு வைக்கறே" என்றாள்.

இங்கே எனக்கும் உஷாவுக்கும் ஆன உறவு பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரண்டு வருடம் முன் இந்த பணியில் சேர்ந்த போது அறிமுகமாகி வெகு விரைவில் நல்ல தோழியும் ஆனாள். அவள் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்த போது எனது அண்ணனை பற்றி அவளிடம் சொல்ல, இரு வீட்டு பெரியவர்களும் பேசி ஒரு நல்ல நாளில் திருமணம் முடிந்தது. நண்பர்களாய் இருந்த நாங்கள் உறவினர்கள் ஆனோம். 

நாங்கள் நல்ல நண்பர்கள், கட்டிக் கொள்ளும் முறை வேறு, சும்மா இருப்பார்களா வீட்டுப் பெரியவர்கள்? அண்ணா கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசத்துக்கு அப்புறம் எங்கள் திருமணப் பேச்சை எடுத்தார்கள். உஷா உடனே ஓகே சொல்லி விட்டாள். அதற்குப் பிறகு தான் தெரிந்தது உஷா எனை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள் என்று. உஷாவை எனக்கும் பிடிக்கும். ஆனால் காதலியாக நான் அவளை என்றும் பார்த்தது இல்லை. அதனால் முதலில் நான் சரி என்று சொல்லவில்லை. அதற்காக வேண்டாம் என்று மறுக்கவும் இல்லை. என் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் எல்லாரும் என்னைக் குடைய. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பிறகு என் வீட்டினரின் நெருக்கடியால் அரை மனதாக சரி என்று சொல்லி விட்டேன். இன்னும் மூன்று மாதத்தில் எங்கள் திருமணம். ஆனாலும் என் மனதில் ஒரு குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருக்கிறது. உஷாவிடம் இதைப் பற்றிப் பேசவா வேண்டாமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. சரியான நேரம் அமையும் போது அவளிடம் என் மனதில் இருப்பதைக் கொட்டி விட காத்துக் கொண்டு இருக்கிறேன்.

அடுத்த நாள் மதியம், மதன் அலுவலகத்தில் நுழையும் போது, உஷா அவனிடம், "மதன் எப்போ இருந்து லிப்ஸ்டிக் போட ஆரம்பிச்சே?" மதன் ஒரு அசட்டு சிரிப்புடன் அவனது உதட்டை கர்சீப்பால் துடைத்தான். 

உடனே உஷா, "அங்கே ஒன்னும் இல்லே, இன்னைக்கு சினிமா போனியே,  எதாச்சும் நடந்துச்சானு செக் பண்ண சும்மா தான் சொன்னேன். இப்போ கன்பார்ம் ஆயிடிச்சு" என்று சிரித்தாள். 

அதற்கும் மதன் அசடு வழிந்து விட்டு இருக்கையில் வந்து அமர்ந்தான்.

பின் எனக்கு மட்டும் கேக்கும் குரலில், "மச்சி லிப்ட்ல வரும் போது, அந்த சொட்டை தலை மேனேஜர் ஒரு பிகர் கிட்ட வழிஞ்சிட்டு இருந்தான். அவ தான் நம்ம டீம்-க்கு புதுசா வந்திருக்கிற பொண்ணுனு அறிமுகம் பண்ணி வைச்சான். என்ன பிகருடா அவ!!!, சேன்சே இல்ல மச்சி… "ஜென்னி"... பேரே செம கிக்கா இருக்கு."

உடனே நான் அவனை இடை மறித்து, "உன் விசா ப்ரொசெஸ் அப்பாயின்ட்மெண்ட்க்கு சென்னைக்கு டிக்கட் புக் பண்ணிட்டியா", டாபிக்கை மாற்ற முயன்றேன்.

"இப்ப அதுவாட முக்கியம். இந்த மாதிரி ஒரு பிகரு நம்ம ஆபிஸ் வந்து இருக்கு. அதை விட்டுட்டு எங்கேயும் போற மாதிரி இல்லை. அவளை நீ பார்த்தியா? அது அது *****(Sensored)****** மாதிரி இருக்கு. அவளை ******(Sensored)******* இல்லைனா

அவன் சொல்லி முடிக்கும் முன், கோபமாக என் சேரில் இருந்து நான் எழுந்தேன்.

"மறுபடி இப்படி பேசர மாதிரி இருந்தா என்னோட பேசவே வேண்டாம்"  சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு நிற்காமல் வெளியேறினேன். 

மதன் எவ்வளவோ முறை இது போல அடுத்த பெண்களை பற்றி பேசி உள்ளான், ஆனால் நான் ஒரு போதும் இவ்வாறு கோபம் அடைத்தது இல்லை. இன்று மட்டும், நான் ஏன் கோபமாக போகிறேன் என தெரியாமல் மதன் குழப்பத்துடன் இருக்க, நான் கோபமாக போவதைப் பார்த்த உஷா மதனை கேள்விக்குறியுடன் நோக்கினாள்.  மதன் ஒன்றும் புரியாமல் "நத்திங்" என்று சொல்லி விட்டு நான் சென்ற வழியை பார்த்து கொண்டு இருந்தான்.

-தொடரும்.

கருத்துகள் இல்லை: