செவ்வாய், 6 நவம்பர், 2018

தித்திக்கும் தீபாவளி


கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் மற்றும் அறம்  யுவா சேவா இணைந்து நடத்திய தித்திக்கும் தீபாவளி கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி சென்னை அண்ணா அரங்கில் நடைபெற்றது. சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 32 காப்பகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட  1400 குழந்தைகளுடன் கோலாகலமாக விழா நடைபெற்றது.

கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் கடந்த 2007 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி என்ற உன்னத நோக்கத்துடன் நிறுவனர் பிரியா அம்மா மற்றும் சில தன்னார்வலர்கள் முயற்சியுடன் துவங்கப்பட்டது. சமூக மற்றும் பொருளாதார தடைகளினால் கல்வியை தொடர இயலாத மாணவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகிறது. பொருளாதார உதவி மட்டும் அன்றி, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், திறமையை வெளிக் கொணரவும் சென்னையில் பல்வேறு இடங்களில் பகுதி நேர திறனுயர்வு(Grooming Center's) மையங்களை நடத்தி வருகிறது.

http://goldheartfoundation.org/index.php


தீபாவளி திருநாள் என்பது வசதி படைத்தோருக்கு மட்டும் அன்றி , ஏழை எளியோருக்கும் சமமானது. அக்குழந்தைகளும் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, கலை நிகழ்ச்சிகள் கண்டு மகிழ்ந்துருக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 2009-ஆம் ஆண்டு கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன்-ஆல் துவங்கப்பட்ட இம்முயற்சி கடந்த பத்தாண்டுகளாக எண்ணற்ற குழந்தைகளை மகிழ்வித்து வருகிறது.


காலை 7.30  மணி அளவில் பல்வேறு காப்பக குழந்தைகள் பேருந்தில் விழா நடைபெறும் சேப்பாக்கம் அண்ணா அரங்குக்கு அழைத்து வரப்பட்டனர். விழாவின் நாயக, நாயகியர்கள் மேள தாளத்துடன், பறை இசை முழங்க , ஆட்டம் பாட்டத்துடன் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர். அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டு அவர்தம் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.குழந்தைகளை ஊக்கமூட்டவும், உற்சாகப் படுத்தவும் பல்வேறு கலைஞர்களும், திரை நட்சத்திரங்களும், சிறப்பு விருந்தினர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதில் முக்கியமாக நம் தேசம் காக்கும் முப்படை வீரர்கள் நால்வர் கலந்து கொண்டதோடு, அறம்  யுவா சேவா சார்பில் வழங்கப்பட்ட புத்தாடைகள், கேரம் போர்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை நமது குழந்தைகளுக்கு வழங்கி சிறப்பித்தனர். முப்படை வீரர்கள் முன்னிலையில் நமது மூவர்ண கொடி முதல் தளத்தில் பறக்க விடப்பட்டது நெகிழ்ச்சியான தருணம்.
ஆட்டம், பாட்டம் என கலை நிகழ்ச்சிகள் களை கட்டியது. குழந்தைகள் குதூகலமாக அவரவர் இருக்கையில் ஆட்டம் போட்டனர். கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் தன்னார்வலர்களும், உறுப்பினர்களும் குழந்தைகளுக்கும், விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறும் பணிக்கு ஆயத்தம் ஆகினர்.
மதிய உணவிற்கு பிறகு, கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது. கலந்து கொண்டு சிறப்பித்த விருந்தினர்களுக்கும், கலைஞர்களுக்கும் கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் சார்பில் நிறுவனர் பிரியா அம்மா மற்றும் அதன் உறுப்பினர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்துக்  கொண்டு இருந்த சிறுமியர்களில் சிலருக்கு மேடையில் பறை அடித்து ஆடி தங்களது திறமையைக் காட்டும் ஆர்வம் வர,
அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. கொண்டாட்டத்தின் கடைசிப் பகுதியாக  அவர்களுக்கு விருப்பமான பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஆடி மகிழ்ந்தனர்.கை நிறைய பரிசுப் பொருட்களுடன், வாய் நிறைய புன்னகையுடன் அவர்கள் வெளியேறிய காட்சி அவர்கள் மனமும் நிறைந்து மகிழ்ந்து கொண்டாடினர் என்பதை சொல்லாமல் உணர்த்தியது. இந்த ஒரு புன்னகைக்காக உழைத்த, உதவிய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் கோல்ட் ஹார்ட் ஃபவுண்டேசன் சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை: