செவ்வாய், 19 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 2.



பாகம் -1,பாகம் -3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6

என்றும் இல்லாமல் அன்று அவ்வளவு நேரத்தில் நான் வீட்டுக்கு வருவதைப் பார்த்த என் அம்மா ஆச்சர்யத்துடன், 

"என்னாச்சுப்பா இப்ப வீட்டுக்கு வந்திருக்கே?" என்று கேட்க

"ஏன் appointment வாங்கிட்டு தான் வரணுமா? " - கோபத்தில் கத்தி விட்டு நிற்காமல் மாடிப்படி ஏறிய என்னை என் அம்மா புரியாமல் நோக்கினார்கள்.

நேராக எனது அறைக்கு சென்று அப்படியே கட்டிலில் விழுந்தேன்.ஒரு ஐந்து நிமிடங்கள் கண்ணை மூடி அமைதியாக இருக்க முயற்சித்தேன். மனதிற்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. 

"யார் மேல் கோபம் எனக்கு? தவறாக பேசிய மதன் மீதா இல்லை எல்லா தவறுகளையும் செய்து கொண்டு இருக்கும் என் மீதா? " அதற்கான விடை நன்றாகத் தெரிந்திருந்தும் அதை மனம் ஒத்துக் கொள்ள மறுத்து சுழ்நிலையின் மீது பழியைப் போட்டது.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். என் அம்மா தான்,

"இவ்வளவு நேரத்துல வந்திருக்கே, பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியலை. சாப்பாடு குக்கர்லே வைச்சிருக்கேன். அது ஆகறதுக்குள்ளே, இந்த மோர் கொஞ்சம் குடி" - என்று பாசமாக டம்ளரை நீட்டினார்கள். நான் குடித்து விட்டு, டம்ளரைத் திருப்பிக் கொடுத்தேன்.

"சரி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, நான் சாப்பாடு ஆனதும் கூப்பிடறேன்." - என்று கூறி விட்டு திரும்பினார்கள்.

"ம்மா" - படி இறங்கி செல்லும் என் அம்மாவை அழைத்தேன். திரும்பி பார்வையாலே என்னவென்று கேட்டார்கள்.

நான், "சாரி, நான் ஏதோ கோபத்துல கத்திட்டேன் " 

"சை..அதுக்கு எதுக்குடா சாரி எல்லாம். நீ என்ன வேணும்னா கத்துனே! நல்லா ரெஸ்ட் எடு. சாப்பாடு ஆனதும் கூப்பிடறேன்" - என்று திரும்பி சென்றார்கள். அம்மாவின் அன்பும், ஜில்லென்று இறங்கிய மோரும் என் கோபத்தைக் கொஞ்சம் தணித்தது.

என் அறைக்குள் நுழைந்து எனது மடிக் கணிணியை உயிர்ப்பித்தேன். என்னுடைய பிரைவேட் ப்ளாக் (Blog) ஒப்பன் பண்ணினேன். இது என் டைரி போல, யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத விசயங்களை இதில் கொட்டும் போது மனம் கொஞ்சம் நிம்மதி அடையும். பல வருடங்களாக என் வாழ்க்கை சம்பவங்களை எழுதி வைத்து யாருக்கும் காட்டாமல் ரகசியமாக பாதுகாத்து வருகிறேன். 

எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தேன் என்றே தெரியவில்லை, என் அம்மா கதவை தட்டிய போது தான் நினைவுக்கு வந்தேன். சாப்பிட எந்திரித்துத் கிளம்பினேன். 

நான் விட்டுச் சென்ற கணினியின் திரைகளில் நீல நிற வண்ணத்தில்,

9 மணி மீட்டிங்காக, 5 நிமிடம் முன்பே சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் பண்ணிக் கொண்டு இருந்தேன். 

"எஃக்யூஸ்மி "  என்று குயில் போல ஒரு குரல். நிமிர்ந்து பார்தேன். குயில் இல்லை, அழகு மயில் ஒன்று நின்று கொண்டு இருந்தது. 

"ஐ யம், ஜென்னி, அசோசியேட் இன் திஸ் ப்ராஜெக்ட்" என்று என் கண்களை பார்த்தவாறே கை கொடுத்தாள்.

"ஐ யம் சூரி, சீனியர் அசோசியேட்" என்று கை கொடுத்தேன். அப்படியே ஷாக் அடித்த மாதிரி ஒரு ஃபீலிங்.மகதீரா படம் பார்த்த எஃபெக்ட் ஆகக் கூட இருக்கலாம். 

அவள் கண்ணை நோக்கினேன். அதில் இருக்கும் காந்த சக்தி என்னை அப்படியே கட்டிப் போட்டது. அந்த நொடியில் அவள் இமை இமைக்க, அப்படியே இதயத்திற்குள் மின்னல் பாய்ச்சியது போல ஒரு உணர்வு. ஒரு பெண்ணின் கண்கள் 1000 வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்ச முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன். இதுவரை எந்தப் பெண்ணைப் பார்த்த போதும் தோன்றாத உணர்வு இது. இதற்கு பெயர் தான், லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் ஓ??? யோசனையில் இருந்த என்னை அவள் குரல் கலைத்தது.

"சூரி,நான் போய் உக்காரட்டா" என்று கேட்டாள், 

நான், "ஷ்யூர், ப்ளீஸ்" என்றேன். 

அவள் சிரித்துக் கொண்டே "அதற்கு நீ என் கையை விடணும் இல்ல?"  என்று கூறினாள். அப்பொழுது தான் நான் இன்னும் அவள் கையை பிடித்துக் கொண்டே இருப்பதை உணர்தேன். 

"சாரி" என்று சொல்லி விட்டு கையை விடுத்தேன். அவள் ஒருமையில் என்னை அழைத்தது ரொம்பவும் பிடித்திருந்தது. அவள் ஒரு விதமான சிரிப்புடன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

பிறகு அடுத்த ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்கில் நான் நானாகவே இல்லை. எவ்வளவோ தவிர்க்க முயன்றும், என் பார்வை அவள் இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. எங்கள் பார்வைகள் சங்கமித்த போது எல்லாம் ஒரு புன்னகை புரிந்து மேலும் இம்சை செய்தாள். அவள் பார்க்காத நொடியில் அவளைப் பார்த்த என் விழிகள், கைகளுக்கு செய்தி அனுப்ப,அது தன்னிச்சை செயலாய் காகிதத்தில் கிறுக்கியது.

மீன்கள் என எண்ணி, 
வலையை விரித்தது என்னவோ 
உன் கண்களுக்குத் தான்...
ஆனால் அதில் சிக்கிக் கொண்டது 
நான் அல்லவா!

ஆகா, என்னையும் ஒரு பெண் கவிதை எழுத வைத்து விட்டாள். 

அப்போது, என் நண்பர் ஒருவர் சொன்னது எனக்கு நினைவு வந்தது. "எப்பொழுது ஒருவன் ஒரு வரிக்குள் அடங்கும் ஒன்றை மூன்று வரிகளுக்கு மேல் எழுதி ஆச்சர்யக் குறியுடன் முடிக்கிறானோ, அப்போதே அவன் காதல் வயப்பட்டு விட்டான் என்று அர்த்தம்.அதை கவிதை என்று அவன் நினைக்கும் நொடியில் காதல் முற்றி விட்டது என்று அர்த்தம்"

"அப்படி என்றால் இது காதல் தானா?" நினைக்கையிலேயே மனதிற்கு இதமாக இருந்தது. 

வெள்ளை உடையில் என்னையும் அவளையும் சுற்றி, நூறு பெண்கள் "நம் தன நம் தனா" என்ற இசையுடன் ஆடுவது போல என மனதிற்குள் காட்சிகள் ஓடியது. அதற்குள் மீட்டிங்கும் முடிந்து விட வெளியே செல்கையில், கதவருகே சென்றவள் திரும்பி என்னை ஒரு பார்வை பார்த்து புன்னகைத்தாள். அந்த பார்வையின் அர்த்தம் என்னவென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. என்னையும் ஒரு பெண் காதலில் வீழ்த்தி விட்டாள்!.

-தொடரும்.

கருத்துகள் இல்லை: