திங்கள், 25 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 4.



பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -5பாகம் - 6

அன்று இரவு, வீட்டில் அமர்ந்திருந்த போது, மதன் என்னிடம் சொல்லிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து என்னை இம்சித்தது. 

"நான் செய்வது மிகத் தவறோ? அவன் சொல்வது போல உஷாவை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறேனோ? ஜென்னியைப் பற்றி உஷாவிடம் சொல்லும் தருணம் வந்து விட்டதோ??? " - என மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். 

அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தாலும்,இதை உஷாவிடம் சொன்னால் ஏற்படும் விளைவுகளை நினைக்கும் போது அவளிடம் இதைப் பற்றி பேசுவதற்கு இது சரியான தருணமா என்ற கேள்வி எழுந்து என்னை மேலும் குழப்பியது. யோசிக்க யோசிக்க குழப்பங்கள் தான் அதிகமானதே தவிர, அதற்கான சரியான விடை கிடைக்கவில்லை.

எப்போதும் போல மனதின் அமைதியைத் தொலைத்தால் என்ன செய்வேனோ அதையே இன்றும் செய்தேன். எனது கணினியில் என் ப்ரைவேட் ப்ளாஃக் ஒபன் பண்ணினேன். 

நான் ஜென்னியின் இருக்கையை நோக்கி சென்று கொண்டு இருந்தேன். தூரத்திலே எனை பார்த்ததும், கையை அசைத்து  

"ஹாய்" என்றாள். 

அவள் இருக்கைக்கு அருகே சென்று அவளது மேசையில் அமர்ந்தவாறே,  

"ஹாய், வேலை எப்படி போய்ட்டு இருக்கு? " என்று கேட்டேன். அவள் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு, 

"நல்ல வேலை யாரும் என்னோட கையை இங்கே பிடிச்சு வைக்கவில்லை, அதனால் வேலை நல்லாவே போகுது" என்று புன்னகையுடன் பதில் அளித்தாள். 

எங்களது முதல் சந்திப்பு என் மனத் திரையில் ஒருமுறை வந்து போக  "இன்னும் அதை நீ மறக்கவில்லையா, அதுதான் அப்பவே சாரி சொன்னேனே! எனி ஹஃவ் மறுபடி சாரி" என்று சொன்னேன். உடனே அவள் முகம் சற்று வாடியது.

"உண்மையாகவே நீ அதை மறந்து விட்டாயா? எப்படி உன்னால மறக்க முடிஞ்சது? " என்று என் கண்களை பார்த்து ஏக்கமாக கேட்டாள்.எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அந்த கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து  இருப்பதாக தோன்றியது.

"அப்படியானால் அவளுக்கும் ஒரு வேளை எனக்கு தோன்றியது போலவே தோன்றி இருக்குமோ???. அவளுக்கும் என் மேல் காதல் இருக்குமோ??? " நினைக்கும் போதே, அப்படியே ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல இருந்தது.நான் பதில் சொல்ல வாய் திறக்கும் போது அவள் சிரிக்க ஆரம்பித்தாள். 

"ஹா ஹா ஹா, ஏமாந்துட்டியா? சும்மா உன்னை டீஸ் பண்ண தான் விளையாட்டுக்கு சொன்னேன். பட் உன்னை இந்த மாதிரி டீஸ் பண்னுனா யுவர் ரியாக்ஸன் லுக்ஸ் சோ ஃபன்னி.சீரியசா எடுத்துக்காத "என்றாள். மனதில் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்து நானும் சிரித்தேன். 

மறுபடி அவளே தொடர்ந்தாள், "சூரி, உன்னை நேத்து தான் பார்த்தேனாலும், ரொம்ப நாளா பழகின மாதிரி ஃபீலிங். அதனால தான் கொஞ்சம் உரிமை எடுத்து விளையாடிட்டேன். உன்னை Hurt பண்ற மாதிரி இருந்திச்சுனா சொல்லிடு, I will not do that again" என்றாள்.

நான், "இல்லை, ஜென்னி, நான் தப்பா எடுக்கலை.உண்மையை சொல்லனும்னா, நீ இப்படி என்கிட்ட உரிமை எடுத்துக்கிறது எனக்கு ரொம்ப  பிடிச்சிருக்கு " என்றேன். 

அவள் விளையாட்டுக்கு என்று சொன்னது ஏமாற்றத்தை அளித்தாலும் அவளால் என்னுடன் சகஜமாக விளையாட முடிகிறது என்று சொன்னது என் மனதிற்கு இதமாய் இருந்தது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடிக்கவில்லை என்றால் இப்படி விளையாட முடியாது. வெறும் நட்பாகக் கூட இருக்கலாம், ஆனால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்த போதே என் காதலில் பாதி வெற்றி அடைந்ததைப் போல உணர்ந்தேன்.

அடுத்த ஐந்து நிமிடங்கள் அவள் தான் பேசிக் கொண்டே இருந்தாள். ஆனால் அவள் பேசியது தான் எதுவும் என் காதில் விழவில்லை! 

அவள் பேச்சின் போது அவள் தலை அசைவிற்கேற்ப அழகான ரிதமுடன் ஆடிக் கொண்டிருந்த அவளது  காதணிகள், பேச்சினூடே அவளது நெற்றியில் சரியும் முடியினை லாவகமாக ஒதுக்கி அவளது காதின் பின்புறம் சொருகும் அவளது அழகிய கை விரல்கள், அழகாக பராமரிக்கப் பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் வானவில் போல பல வண்ணங்களுடன் மின்னிய அவளது கை நகங்கள், அந்த விரல்கள் அவ்வப்போது விளையாடும் அழகிய டாலருடன் கூடிய அவளது செயின், அந்த செயின் குடியிருக்கும் அழகிய சங்கு போன்ற அவளது கழுத்து, மழை பெய்து சிறிது நேரம் கழித்து கண்ணாடி ஜன்னலில் அழகாக காட்சியளிக்கும்  சிறு நீர்த்துவளைகளைப் போல, அவளது பளிங்கு கழுத்தில் ஒட்டியிருந்த அழகிய வேர்வைத் துளிகள் என என் கவனம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருந்தது.

"ஹே இங்க ஒருத்தி எவ்வளோ கஷ்டப்பட்டு, கதை அடிச்சிட்டு இருக்கேன், நீ என்ன பகல் கனவு கண்டுட்டு இருக்கியா? " - என் தொடையை கிள்ளி என்னை ஜென்னி நிஜ உலகிற்கு கொண்டு வந்தாள்.

"Sorry, I just got Zoomed out. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தேன். 

அப்போது கை தவறுதலாக அவள் டேபிளின் மேல் இருந்த வண்டி சாவியைத் தட்டி விட அது கீழே விழுந்தது. அதனை எடுக்க அவள் குனிந்தாள். அனிச்சை செயலாய் நானும் குனிந்து எடுக்க, அவளது கை வண்டி சாவியையும், எனது  கை அவளது கையையும் பற்றியது. அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள், 

"இந்த முறை எவ்வளவு நேரம் என் கையை பிடிச்சிட்டு இருக்க போறே?"  என்று சிரித்து கொண்டே கேட்டாள். 

சில நேரங்களில் நாம் எவ்வளவோ யோசித்தாலும் நம் மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் சில சமயங்களில் நாம் எவ்வளவோ முயன்றாலும் நம் மனதில் இருப்பதை மறைக்க இயலாது. இந்த முறை எனது மூளையின் அனுமதியின்றியே எனது வாய் செயல்பட்டு அந்த வார்தையை உதிர்த்தது.

"என் வாழ் நாள் முழுவதும் ஜென்னி" 

நான் விளையாட்டிற்கு சொல்கிறேனா? இல்லை உண்மையாக சொல்கிறேனா என்று தெரியாமல் என் கண்களை ஜென்னி ஊடுருவிப் பார்த்தாள். அதில் தெரிந்த தீவிரத்தைக் கண்டு சிரிப்பதை நிறுத்தினாள். ஆனால் அவள் விழிகளை எனது விழிகளில் இருந்து நீக்கவில்லை. இருவரது கண்களும் கலந்தன. இருவரது இமைகளும் சில நொடிகள் இமைக்க கூட மறந்தன. அந்த நொடியை வீணாக்க விரும்பாமல்

"ஐ லவ் யு ஜென்னி" என்றேன். 

படபடவென்று பட்டாம் பூச்சி போல இமைத்தது அவளது இமைகள். அவள் நடப்பது எல்லாம் கனவா இல்லை நிஜமா என்று யோசிக்கிறாள் என்று அவளது முகம் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது. ஆனால் அவளது கண்களில் தெரிந்தது ஆனந்தமா இல்லை அதிர்ச்சியா  என்று தெரியவில்லை. சில நொடிகள் என்னை மீண்டும் உற்று நோக்கியவள் என் கைகளை விலக்கி விட்டு, எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.

"ஒரு வேளை நான் அவசரப்பட்டு விட்டேனோ? காதலைச் சொல்லி உருவாக இருந்த நல்ல நட்பினைக் கூட கெடுத்து விட்டேனோ? " என மனதில் தோன்ற, அதற்குள் என் மனதின் இன்னொரு குரலோ "ஒரு பெண்ணிடம் காதலை சொல்லவே தனி தைரியம் வேண்டும், சபாஷ் சூரி " என்று என்னைத் தட்டிக் கொடுக்க. ஜென்னியின் மனதில் என்ன இருக்குமோ என்று யோசித்தவாறே எனது இருக்கையை நோக்கி நகர்ந்தேன்.

-தொடரும்.

1 கருத்து:

The Stupid சொன்னது…

nee oru kavignan da.... pinra po..............