புதன், 22 பிப்ரவரி, 2017

உனை சந்தித்த முதல் தருணம்...

பேசி பேசிக் களைத்தும்,
மீண்டும் உன் குரல் கேட்க
வேறு என்ன பிடிக்கும் என்றேன்.

கண்கள் மலர, கைகள் விரிய
"கவிதைகளின் காதலி" என்றாய்!

சிறகடித்துப் பறந்த இதயம்
கிறுக்கவும்  விழைந்தது.

ஒரு சுப வேளையில்,
"அழகான பெண்ணே" என
பிள்ளையார் சுழி கூட போட்டது!

அடுத்த வரி???
யோசித்து யோசித்துப்
பார்த்தும் முடியாமல்,
"அழகான பெண்ணே!"
என ஆச்சர்யக் குறியுடன்
முடித்தது.

 உன்னில் கிறங்கிக்
கிடந்த கிறுக்கனுக்கு
கிறுக்கக் கூட தெரியவில்லை.

பல வருடங்கள் கடந்து
வந்த பின்பு,

நினைவுகளில் மூழ்கி
முத்தெடுத்துக் கொண்டு
இருந்த போது,
முள்ளாய் குத்தியது நான்
விட்டு வைத்த மிச்சம்!

முதல் வரியை
மீண்டும் மீண்டும்
முறைத்தேன்.

"அழகான பெண்ணே!",
"அழகான பெண்ணே!",
"அழகான பெண்ணே!",

அடுத்த வரிக்கு
முயன்று முயன்று
மீண்டும் தோற்றேன்.

காகிதத்தை கசக்கி
எறிந்து விட்டு
சிரிப்புடன் எழுந்தேன்.

"பெண் என்றாலே அழகுதானே!"
என்று அதற்குள் நீ எனக்கு
புரிய வைத்து விட்டதாலோ
என்னவோ!!!