திங்கள், 16 ஜூலை, 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 6 (முடிவுற்றது)



பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் - 4பாகம் - 5

அன்று இரவும் வழக்கம் போல எனது கணினியுடன் எனது நேரத்தை பங்கிட்டுக் கொண்டு இருந்தேன்..அதன் திரைகளில், 

மாலை நானும் ஜென்னியும் ஜூஸ் குடித்துக் கொண்டு இருந்தோம். அவள் பேசுவாள் என்று நானும், நான் தொடங்கட்டும் என்று அவளும் காத்திருக்க

"இப்போ சொல்லு ஜென்னி" அங்கு நிலவிய மொளனத்தை கலைத்தேன்.

ஒரு நிமிடம் யோசித்த ஜென்னி, "சூரி எப்படி சொல்றதுனு தெரியலை, உன்னை பார்த்த நாள்ல இருந்தே எனக்கும் உன்னை பிடிச்சது.நீ முதல் முதலா என் கையைப் பிடிச்சப்ப எனக்குள்ள ஒரு ஷாக் அடிச்ச மாதிரி இருந்திச்சு. ஏதோ பல ஜென்ம தொடர்பு மாதிரி ஃபீலிங்(அதே மகதீரா எஃபெக்ட் தான்).ஆனா, நமக்குள்ள எந்த அளவுக்கு ஒத்து வரும்னு தெரியலை"

நான், "புரியலை ஜென்னி, உனக்கும் பிடிச்சிருக்குனு சொல்றே, ஆனா ஒத்து வராதுனும் சொல்றே. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு ஜென்னி" என்றேன்.

ஜென்னி தொடர்ந்தாள், "சூரி, நான் மத்த பொண்ணுகள்ள இருந்து ரொம்பவே வித்தியாசம் ஆனவ. பொண்ணுகனா இப்படித்தான் இருக்கனும் அப்படினு கட்டம், வட்டம் லாம் போட்டு வாழற வாழ்க்கை எனக்கு பிடிக்காது. அடுத்த நிமிஷம் நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது, ஐ யம் வெரி அன்ப்ரெடிக்டபிள் "

உடனே நான், "ஜென்னி, அதனால தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு"

அதற்கு ஜென்னி சிரித்துக் கொண்டே, "எல்லா ஆம்பிளைகளும், முதல்ல அப்படித் தான்டா சொல்வீங்க, கொஞ்ச நாள்ல மாறிடுவீங்க". நான் புன்னகையை மட்டும் பதிலாக அளித்தேன்.

அவளே தொடர்ந்தாள், "நான் சீக்கிரம் போர் அடிச்சிடுவேன் சூரி, இவளை ஏண்டா லவ் பண்ணுனோம்னு தோணும் உனக்கு..அதுவும் இல்லாம"

அவள் அடுத்த வார்த்தையை உதிர்ப்பதற்க்கு முன் ஜென்னியின் கைகளைப் பற்றினேன்.. அவள் கண்களை நேராக பார்த்து, "ஜென்னி அடுத்த நிமிசம் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. இந்த நிமிசம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னோட பேசற ஒவ்வொரு நிமிசமும் நான் ஏதோ புதுசா பிறந்த மாதிரி ஃபீல் பண்றேன். உன் கையைப் பிடிச்சிட்டு இருக்கிற ஒவ்வொரு நொடியும், அந்த நொடியோட உலகம் அப்படியே உறைஞ்சு போயிடக் கூடாதோனு தோணுது. நீ எனக்காக பிறந்தவனு உன்னைப் பார்த்த நாள்ல இருந்தே எனக்கு தோணிட்டு இருக்கு ஜென்னி. உனக்கும் அதே மாதிரி தோணுச்சினா என் காதலை ஏத்துக்கோ. Lets not worry about the destination, We will just enjoy our journey together. இது எங்க போய் முடியுதோ அங்க முடியட்டும்" என்றேன்.

அவளது கண்கள் கலங்கியது. ஆனால் உதடுகள் சிரித்தன. அதுவே அவளூக்கு சம்மதம் என உணர்த்தியது. பொது இடம் என்பதை மறந்து எனது தோளில் அப்படியே சாய்ந்தாள்.

உடனே நான், "ஜென்னி இந்த நாளை நாம் கொண்டாடனும், உனக்கு என்ன வேனும்னு சொல்லு" என்றேன்.

அவள், சிரித்துக் கொண்டே "உலகத்துல விலை மதிக்க முடியாத சொத்து நீயே எனக்கு கிடைச்சிருக்கே, எனக்கு வேற என்ன வேண்டும்.வாழ் நாள் பூரா சந்தோசமா இப்படியே இருந்தா போதும்"

நான் பெருமையுடன் அவளை பார்க்க, ஒரு நொடி இடைவெளி விட்டு "அப்படீனு டயலாக் அடிப்பேனு நினைக்காதே, உன் க்ரேடிட் கார்டுக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை வைப்போம் வா" என்று அருகில் இருந்த கடைக்கு அழைத்து சென்றாள்.

படித்து விட்டு எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை. எனது கதவு தட்டப்படும் சத்தம் எனது நினைவைக் கலைத்தது. சாப்பிடக் கூப்பிடுவதற்காக அம்மாவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கதவைத் திறந்த எனக்கு அதிர்ச்சி. அங்கே கோபமாக உஷா நின்று கொண்டு இருந்தாள். அவளை அந்த நேரத்தில் நான் எதிர்பார்க்கவில்லை. 

"உஷா என்ன இந்த நேரத்திலே? " எனது கேள்விக்கு பதில் அளிக்காமல் எனது அறைக்குள் நுழைந்தவள், என்னிடம் எதுவும் பேசாமல் எனது மொபைல் போனை எடுத்து நீட்டினாள். குழப்பத்துடன் வாங்கிப் பார்த்தேன். அதன் டிஸ்ப்ளே, 36 மிஸ்டு கால் என்று காட்டியது. திறந்து பார்த்தேன், அனைத்தும் உஷாவிடம் இருந்து.

"சாரி உஷா, நான் வேற ஒரு முக்கியமான வேலையா இருந்தேன். அதனால தான் கவனிக்கல. I am Extremely Sorry" என்று அவள் அருகே அமர்ந்து அவளது கையைப் பிடித்தேன். உடனே கையை இழுத்துக் கொண்டாள்.

"சாயந்திரம் ஆறு மணிக்கு எங்கே இருந்தே? " சுவர் கடிகாரத்தை நோக்கிக் கொண்டே என்னைக் கேட்டாள்.

நான், "மதனும் நானும் ஒரு முக்கியமான விசயமா

முடிப்பதற்கு முன் "பொய் சொல்லாதே " என்று கத்தினாள்.

நான் " இல்லை உஷா, உண்மையாவே நான் மதனோட"

"நான் பார்த்தேன் சூரி. நீயும் ஜென்னியும் பார்க் ல பேசிட்டு இருந்ததை" அவளது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே உஷா கூறியதைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றேன். அடுத்த பத்து நிமிடங்கள் அங்கே கடிகார முள்ளின் ஓசையைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. இனி மறைத்து பிரயோஜனம் இல்லை என்று தோன்ற என் மனதில் உஷாவிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று ஒத்திகை பார்க்க ஆரம்பித்தேன்.

நான், "உஷா இதை நான் முதல்லயே சொல்லி இருக்கணும். ஆனா நீ எப்படி எடுத்துக்குவேனு தெரியலை. அதனால தான் சொல்லலை. எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள்லே சொல்லி இருப்பேன். ஆனா அதுக்குள்ள நீயே பார்த்துட்ட " உஷாவின் முகத்தில் கவலை ரேகைகள் அதிகமாகத் தெரிந்தது.

எனது கணினியில் அமர்ந்து ஜென்னியைப் பார்த்த நாளில் எழுதிய பக்கத்தைத் திறந்தேன். உஷாவை கண்களாலேயே படிக்க அழைத்தேன். அவள் குழப்பத்துடன் எழுந்து வந்து படிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போதும் அவளது முகத்தில் உணர்ச்சிகள் மாறிக் கொண்டே இருந்தது. ஜென்னியும் நானும் காதலைப் பரிமாறிக் கொண்ட தருணத்தைப் படித்தவள் அழுகை அதிகமானது. அவள் அருகே சென்று சமாதானம் செய்யும் தைரியம் இன்றி அவள் அழுது முடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

அழுது கொண்டிருந்தவள் ஏதோ தோன்றவே எனது கணினியை மறுபடியும் பார்த்தாள். பின்னர் காலண்டரை பார்த்தாள். பின் நம்ப முடியாமல் எனது கணினியின் திரையை மறுபடி பார்த்து விட்டு என்னைப் பார்த்து 

"ஆனா சூரி, இது எல்லாமே நீ 2010 ல எழுதி இருக்கே. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி. ஆனா ஜென்னியை இப்ப தானே" அவள் முகத்தில் கவலை ரேகை மறைந்து குழப்ப ரேகைகள் தோன்றின.

" எனக்கு ஜென்னியை முதலே தெரியும் உஷா. இது எல்லாமே உன்னை மீட் பண்றதுக்கு முன்னாடி நடந்தது " நான் எவ்வித உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் சொன்னேன். அவளது குழப்பம் அதிகமாகியது. நானாகவே தொடர்வேன் என்று எதிர்பார்த்து என்னை குழப்பம் அகலா பார்வையுடன் நோக்கினாள்.

நான் தொடர்ந்தேன், " அவகிட்ட நான் காதலை சொன்னதும் ரொம்ப சந்தோசமா எங்க வாழ்க்கை போச்சு. ஆனா ரொம்ப நாள் எங்க சந்தோசம் நிலைக்கலை. அவ பயந்த மாதிரியே நடந்திடுச்சு. விளையாட்டா எங்களுக்குள்ள் ஆரமிச்ச சண்டை நீயா, நானா-னு பெரிய ஈகோ பிரச்சனையா மாறி நாங்க பிரியற அளவுக்கு ஆயிடிச்சு. நான் எவ்வளவோ அவளை சமாதானப் படுத்தியும் அவ சமாதானமே ஆகலை.ஒரு காலத்துல என்னை அவமானப் படுத்தற மாதிரி நடந்துக்கிட்டா என்னால பொறுக்க முடியலை. நானும் பேசக் கூடாத வார்த்தைகள் சிலதை பேசிட்டேன். அப்புறம் அவளை என்னால பார்க்க கூட முடியலை. எங்கிட்ட சொல்லாம எங்கேயோ போயிட்டா. கொஞ்ச நாள் தேடி அலைஞ்சும் கண்டு பிடிக்கவே முடியலை". நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள் உஷா.

நானே மறுபடி தொடர்ந்தேன். " என்னால அங்க இருக்க முடியலை, அதான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு நம்ம கம்பெனில ஜாயின் பண்ணினேன். அப்புறம் உன்னை மீட் பண்ணுனேன். அதுக்கு அப்புறம் தான் கொஞ்ச கொஞ்சமா நார்மலான வாழ்க்கைக்கு திரும்பினேன். உன்னை எனக்கு பிடிச்சிருந்தாலும் இந்த குற்ற உணர்வு என் மனசை அரிச்சிட்டே இருந்திச்சு.ஜென்னி என்ன ஆனா, அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கானு தெரியாம எனக்காக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்க பிடிக்கலை. ஆனாலும் உன்னை மாதிரியான ஒரு பொண்ணை இழக்கவும் விரும்பலை. இருதலைக் கொள்ளி எறும்பு போல என் மனசுல பூட்டி வைச்சுட்டு உங்கிட்ட சொல்லவும் முடியாம, மறைக்கவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்." உஷா என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகவே இருந்தாள்.

"அப்புறம் அவளை நம்ம ஆபிஸ் ல மறுபடி பார்த்தப்ப என்னால நம்மவே முடியலை,எனக்கு என்ன பேசறதுனே தெரியலை. எதுவும் பேசாம வந்துட்டேன், நீ அவளுக்கு ப்ராஜெக்ட் போல்டர் செட் பண்ண ஹெல்ப் பண்ண சொன்னப்ப நான் தயங்கினதும் அதனால தான். இன்னைக்கு அவளும் நானும் பார்க் ல  பேசினதுக்கு அப்புறம் தான் எல்லாத்துக்கும் பதில் கிடைச்சு என் மனது நிம்மதி ஆச்சு" 

உஷா அதிர்ச்சி விலகாமல் "சோ..ரெண்டு பேரும் மறுபடி உங்க உறவை புதுப்பிக்க போறீங்களா?" என்று கவலையுடன் கேட்டாள்.

"இல்லை உஷா, அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சு" என்றேன்.

இதைக் கேட்டதும், அவள் முகத்தில், கொஞ்சம் நிம்மதி தெரிந்தது. "அப்போ வேற என்னதான் பேசினீங்க" என்று கேட்டாள்.

"அவ அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டா. தான் பண்ணுனது தப்புனு அவ பின்னாடி உணர்ந்தாலும்,அவ ஈகோ வை விட்டுட்டு அவளாலே என்னோட மறுபடி சேர முடியலைனு சொன்னா. நானும் நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்டேன். இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகி சந்தோஷமான வாழ்க்கை வாழறாளாம்.அவ கணவன் அவளை பூப்போல தாங்கறான். என்னைப் பார்த்து எல்லாம் சொன்னதும் அவ மனசும் ரொம்ப தெளிவா இருக்குனு சொன்னா. ஆனாலும் ஒரே இடத்துல இதுக்கு மேல வேலை பார்க்க முடியாதுனு தான் மேனேஜர் ஐ பார்த்து பேசி, அவ வேலையை ரிசைன் பண்ணிட்டாளாம்..என்னை சந்தோஷமான வாழ்க்கை அமைச்சுக்க சொல்லிட்டு, என் கல்யாணத்துக்கு கூப்பிட சொல்லிட்டு போயிட்டா.எனக்கும் என் மனசில இருந்த குற்ற உணர்வுலாம் போயி இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் உஷா" என்றேன்.

எல்லா குழப்பமும் அகன்று உஷாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. என்னைப் பார்த்து " இதை ஏன் எங்கிட்ட மறைச்சே, உன்னோட கடந்த காலம் எனக்கு முக்கியம் இல்லை. ஆனா நான் புரிஞ்சிக்க மாட்டேனு சொல்லி மறைச்சிட்டலே அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு" என்றாள்.

"இல்லை உஷா. உன்கிட்ட மறைச்சு உன்னை ஏமாத்தனும்னு நினைக்கலை. எப்படி இருந்தாலும் உன்கிட்ட சொல்லி இருப்பேன். ஆனா அதுக்கான சரியான நேரம் தான் அமையாம போச்சு" என்றேன்.

அவள், "நீ என்ன வேணா சொல்லு சூரி. நீ மறைச்சது தப்பு தான். ஆனாலும் பரவாயில்லை உன்னை பாவம்னு மன்னிச்சு விட்டுடறேன் " புன்னகையுடன் சொன்னாள்.

நான், " இப்போ தான் எல்லா உண்மையும் சொல்லிட்டேனே. அதனாலே " 

"அதனால? " என்று குறும்பு பார்வையுடன் என்னைப் பார்த்து கேட்டாள்.

"இப்பவும் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றேன்.

உஷா ஒரு நிமிடம் யோசித்து விட்டு  "ரெண்டு கண்டிசன்" என்று சொன்னாள். நான் என்ன என்பது போலப் பார்த்தேன்.

"ஜென்னியை, நம்ம கல்யாணத்துக்கு கூப்பிட கூடாது. உன் மேலே சந்தேகப்பட்டு சொல்லலை, பாஸ்ட் இஸ் பாஸ்ட் ஆவே இருக்கட்டும், நம்ம ப்ரெசெண்ட் லயும் ப்ஃயுச்சர் லயும் வர வேண்டாமே!!!"

"ரெண்டாவது, மூணு நாள் பார்த்த ஜென்னியைப் பத்தியே பக்கம் பக்கமா எழுதி இருக்கே, நான் உன்னோட ரெண்டு வருசமா இருக்கேன், என்னை பத்தியும் நீ ஒரு கதையா எழுதணும். சோ மிஸ்டர் ரிஷி, டீலா? நோ டீலா? " என்று சிரித்தவாறே கையை உயர்த்திக் கேட்ட உஷாவை, ஒரு நொடி கூட யோசிக்காமல் "டீல்" என்று கட்டி அணைத்தேன்.

-முற்றும்.

புதன், 11 ஜூலை, 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 5


பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் - 4பாகம் - 6


அடுத்த நாள் காலை ,நான் அலுவலகத்தில் நுழையும் போது தூரத்தில் ஜென்னியும், உஷாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள். யாராவது ஒருவர் சிரித்தாலே போதும், உடனே எங்களது திருமணப் பத்திரிக்கையை நீட்டி விடும் ரகம் உஷா. ஜென்னியை வேறு அவளுக்குப் பிடிக்கும், எங்களது திருமணத்தைப் பற்றி சொல்லி இருப்பாளோ? அதைக் கேட்டதும் ஜென்னியின் ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்? என் மனதிற்குள்ளே கேள்விகள் எழும்பி என் இதயத்தை தாறுமாறாக துடிக்கச் செய்தது. எனது நடையை வேகமாக்கி எனது கேபினுக்குள் நுழைந்தேன்.

என்னைப் பார்த்ததும் அதுவரை இயல்பாக பேசிக் கொண்டு இருந்த ஜென்னியின் பேச்சும் பார்வையும் தடுமாறத் துவங்கியது. அதனை உஷாவும் கவனிக்க தவறவில்லை. 

"உஷா, ஒரு முக்கியமான வேலையை மறந்துட்டேன். முடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் " - சொல்லிவிட்டு ஜென்னி அவளது இருக்கையை நோக்கி நகர்ந்தாள்.

"சூரி, உன்னைப் பார்த்துட்டு ஜென்னி ஏன் பேயைப் பார்த்த மாதிரி ஒடறா? " - உஷா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, "எனக்கு என்னவோ வெக்கப்பட்டு ஓடற மாதிரி இல்லை இருக்கு " - மதன் வெடியைப் பற்ற வைத்தான். 

உஷா அவனை முறைத்தவாறே, " ஆரம்பிச்சிட்டியா உன் நாரதர் வேலையை? அடுத்தவங்களுக்கு சிண்டு முடியறதுல உனக்கு அப்படி என்ன தான் சுகமோ ?" என்று கேட்க, மதன் அதற்கும் நக்கலாக ஏதோ பதில் சொல்ல, உஷா ஜென்னி விசயத்தை மறந்து அவனை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள். எப்படியோ என் தலை தப்பியது என்று நிம்மதி அடைந்து என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

எனது மெயில் பாக்ஸை திறந்த போது ஆச்சர்யம் அடைந்தேன். ஜென்னியிடம் இருந்து மெயில்

"We will meet at the park next to office at 6 PM today". 

அனுப்பிய நேரம் பார்த்தேன். இப்போது தான் ஒரு நிமிடம் முன்பு அனுப்பி இருக்கிறாள். எதைப் பற்றி பேசப் போகிறாள். ஒரு வேளை உஷா எங்களது திருமணத்தைப் பற்றி சொல்லி இருப்பாளோ? அது தெரியாமல் என் தலையே வெடித்து விடும் போல இருந்தது. 

மதனுக்கு மெசேஜ் அனுப்பினேன். "Did Usha talk about our marriage to Jennie? " 

உடனே அவனிடம் இருந்து பதில் வந்தது. "Let me ask Usha :) " 

அவனுக்கு பதில் அனுப்ப டைப் செய்கையில் "உஷாஜென்னி கிட்ட சொன்னியா? " - மதன் கேட்ட கேள்வியில் என் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்றது.

"எதைப் பத்தி கேட்கறே? " - உஷா அவனைக் குழப்பத்துடன் கேட்டாள். மதனைத் திரும்பி நான் பார்த்த பார்வையில் இருந்தது கோபமா, இல்லை வெறுப்பா என்று எனக்கே தெரியவில்லை.

என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, " நம்ம டீம் அவுட்டிங் பத்தி " என்று மதன் சொன்னதும் தான் நின்ற இதயம் துடிக்க ஆரம்பித்தது.

"மறந்தே போயிட்டேன், நல்ல வேளை நியாபகப் படுத்தினே " - சொல்லிவிட்டு ஜென்னியின் இருக்கையை நோக்கி நகர்ந்தாள். அவள் வெளியேறும் வரை காத்திருந்த நான், மதனிடம் திரும்பி

"மதன் நீ என்னை ரொம்ப டென்சன் ஆக்கிட்டு இருக்கே. எப்போ நான் வெடிக்க போறேனு எனக்கே தெரியலை " என்றேன்.

என்னைக் கூர்ந்து கவனித்தவன், " உனக்கும் ஜென்னிக்கும் நடுவிலே ஒண்ணும் இல்லைனு சொன்னே, இப்போ நீ ஏன் டென்சன் ஆகணும்? " எதிர் கேள்வி கேட்டு என்னை மடக்கினான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தேன்.

மதனே தொடர்ந்தான், "சூரி இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இதைப் பத்தி பேச இஷ்டம் இல்லைனா சொல்லிடு நான் எதுவும் கேக்கலை". எனக்கும் என் மனதில் இருப்பதை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும் என்று தோன்றியது. என் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு போராடிக் கொண்டு இருப்பது ரண வலியை ஏற்படுத்தியது.

உடனே அவனிடம், " மதன் இங்க வேண்டாம். கேண்டின் போய் பேசலாம் வா" என்று அவனை அழைத்துக் கொண்டு கேண்டின் சென்றேன். இரண்டு ஜீஸ் ஆர்டர் செய்து விட்டு அமைதியாக இருந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம். ஆனாலும் எப்படி துவங்குவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

"சொல்லு சூரி, கண்டிப்பா இப்ப நாம பேசறதை உஷா கிட்ட சொல்ல மாட்டேன். என்னை நீ நம்பலாம்" மதன் தான் தொடங்கி வைத்தான்.

அவனிடம் ஜென்னியை சந்தித்தது முதல் நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கொட்டினேன். நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தான். அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு,

"இப்போ சொல்லு மதன், நான் உஷா கிட்ட இதை எப்படி சொல்ல முடியும்? அவ இதை எப்படி எடுத்துக்குவானு எனக்குத் தெரியலை " என்றேன்.

"சூரி சொல்றேனு தப்பா நினைக்காதே. எப்படி இருந்தாலும் இந்த விசயத்தை அவளுக்கு தெரியாம ரொம்ப நாள் மறைக்க முடியாது. அவளா தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி நீயே சொல்லிட்டா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். உங்க ரெண்டு பேரையும் நல்லா தெரிஞ்சவன்கிற முறையில சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம் " என்று சொல்லி விட்டு கீழே செல்வதற்காக எழுந்தான்.

மதன் சொல்வது தான் சரியென எனக்கும் பட்டது. உஷாவிடம் என் மனதில் இருப்பதைக் கொட்டும் நாள் வந்து விட்டது. ஆனால் எப்படி எங்கே ஆரம்பிப்பது என்று தான் குழப்பமாக இருந்தது. இருப்பினும் மனதில் இருப்பதை மதனிடம் இறக்கி வைத்ததால் மனம் கொஞ்சம் தெம்பாகவும், தெளிவாகவும் இருந்தது.இருவரும் திரும்ப அலுவலகத்த்திற்குள் நுழைந்தோம்.

அங்கே எங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள் உஷா. எங்களைப் பார்த்ததும்,

"எங்கடா ரெண்டு பேரும் போயிட்டீங்க. என் தலையே வெடிக்கற மாதிரி நியூஸ் ஒண்ணு ஜென்னி சொன்னா" என்று நிறுத்தி விட்டு எங்களைப் பார்த்தாள்.

என்ன என்பது போல நாங்கள் இருவரும் அவளை நோக்க

"அவ வேலையை ரிசைன் பண்ணிட்டாளாம், அதனால அடுத்த வார அவுட்டிங்க்கு இங்க இருக்க மாட்டாளாம். எவ்வளவோ தடவை காரணம் கேட்டும் ஏன் வந்த மூணு நாளிலேயே ரிசைன் பண்றானு சொல்லவே இல்லை " - ஒரு குழப்பத்துடன் என்னைப் பார்த்தவாறே சொல்லிய உஷாவின் பார்வையை ஒதுக்கி வைத்து விட்டு, மதனை நோக்கி திரும்பினேன்.

என்னைப் போலவே அதிர்ச்சியும், குழப்பமும் கலந்த பார்வையுடன் மதன் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

- தொடரும்.