புதன், 11 ஜூலை, 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 5


பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் - 4பாகம் - 6


அடுத்த நாள் காலை ,நான் அலுவலகத்தில் நுழையும் போது தூரத்தில் ஜென்னியும், உஷாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள். யாராவது ஒருவர் சிரித்தாலே போதும், உடனே எங்களது திருமணப் பத்திரிக்கையை நீட்டி விடும் ரகம் உஷா. ஜென்னியை வேறு அவளுக்குப் பிடிக்கும், எங்களது திருமணத்தைப் பற்றி சொல்லி இருப்பாளோ? அதைக் கேட்டதும் ஜென்னியின் ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்? என் மனதிற்குள்ளே கேள்விகள் எழும்பி என் இதயத்தை தாறுமாறாக துடிக்கச் செய்தது. எனது நடையை வேகமாக்கி எனது கேபினுக்குள் நுழைந்தேன்.

என்னைப் பார்த்ததும் அதுவரை இயல்பாக பேசிக் கொண்டு இருந்த ஜென்னியின் பேச்சும் பார்வையும் தடுமாறத் துவங்கியது. அதனை உஷாவும் கவனிக்க தவறவில்லை. 

"உஷா, ஒரு முக்கியமான வேலையை மறந்துட்டேன். முடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் " - சொல்லிவிட்டு ஜென்னி அவளது இருக்கையை நோக்கி நகர்ந்தாள்.

"சூரி, உன்னைப் பார்த்துட்டு ஜென்னி ஏன் பேயைப் பார்த்த மாதிரி ஒடறா? " - உஷா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, "எனக்கு என்னவோ வெக்கப்பட்டு ஓடற மாதிரி இல்லை இருக்கு " - மதன் வெடியைப் பற்ற வைத்தான். 

உஷா அவனை முறைத்தவாறே, " ஆரம்பிச்சிட்டியா உன் நாரதர் வேலையை? அடுத்தவங்களுக்கு சிண்டு முடியறதுல உனக்கு அப்படி என்ன தான் சுகமோ ?" என்று கேட்க, மதன் அதற்கும் நக்கலாக ஏதோ பதில் சொல்ல, உஷா ஜென்னி விசயத்தை மறந்து அவனை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள். எப்படியோ என் தலை தப்பியது என்று நிம்மதி அடைந்து என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

எனது மெயில் பாக்ஸை திறந்த போது ஆச்சர்யம் அடைந்தேன். ஜென்னியிடம் இருந்து மெயில்

"We will meet at the park next to office at 6 PM today". 

அனுப்பிய நேரம் பார்த்தேன். இப்போது தான் ஒரு நிமிடம் முன்பு அனுப்பி இருக்கிறாள். எதைப் பற்றி பேசப் போகிறாள். ஒரு வேளை உஷா எங்களது திருமணத்தைப் பற்றி சொல்லி இருப்பாளோ? அது தெரியாமல் என் தலையே வெடித்து விடும் போல இருந்தது. 

மதனுக்கு மெசேஜ் அனுப்பினேன். "Did Usha talk about our marriage to Jennie? " 

உடனே அவனிடம் இருந்து பதில் வந்தது. "Let me ask Usha :) " 

அவனுக்கு பதில் அனுப்ப டைப் செய்கையில் "உஷாஜென்னி கிட்ட சொன்னியா? " - மதன் கேட்ட கேள்வியில் என் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்றது.

"எதைப் பத்தி கேட்கறே? " - உஷா அவனைக் குழப்பத்துடன் கேட்டாள். மதனைத் திரும்பி நான் பார்த்த பார்வையில் இருந்தது கோபமா, இல்லை வெறுப்பா என்று எனக்கே தெரியவில்லை.

என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, " நம்ம டீம் அவுட்டிங் பத்தி " என்று மதன் சொன்னதும் தான் நின்ற இதயம் துடிக்க ஆரம்பித்தது.

"மறந்தே போயிட்டேன், நல்ல வேளை நியாபகப் படுத்தினே " - சொல்லிவிட்டு ஜென்னியின் இருக்கையை நோக்கி நகர்ந்தாள். அவள் வெளியேறும் வரை காத்திருந்த நான், மதனிடம் திரும்பி

"மதன் நீ என்னை ரொம்ப டென்சன் ஆக்கிட்டு இருக்கே. எப்போ நான் வெடிக்க போறேனு எனக்கே தெரியலை " என்றேன்.

என்னைக் கூர்ந்து கவனித்தவன், " உனக்கும் ஜென்னிக்கும் நடுவிலே ஒண்ணும் இல்லைனு சொன்னே, இப்போ நீ ஏன் டென்சன் ஆகணும்? " எதிர் கேள்வி கேட்டு என்னை மடக்கினான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தேன்.

மதனே தொடர்ந்தான், "சூரி இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இதைப் பத்தி பேச இஷ்டம் இல்லைனா சொல்லிடு நான் எதுவும் கேக்கலை". எனக்கும் என் மனதில் இருப்பதை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும் என்று தோன்றியது. என் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு போராடிக் கொண்டு இருப்பது ரண வலியை ஏற்படுத்தியது.

உடனே அவனிடம், " மதன் இங்க வேண்டாம். கேண்டின் போய் பேசலாம் வா" என்று அவனை அழைத்துக் கொண்டு கேண்டின் சென்றேன். இரண்டு ஜீஸ் ஆர்டர் செய்து விட்டு அமைதியாக இருந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம். ஆனாலும் எப்படி துவங்குவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

"சொல்லு சூரி, கண்டிப்பா இப்ப நாம பேசறதை உஷா கிட்ட சொல்ல மாட்டேன். என்னை நீ நம்பலாம்" மதன் தான் தொடங்கி வைத்தான்.

அவனிடம் ஜென்னியை சந்தித்தது முதல் நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கொட்டினேன். நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தான். அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு,

"இப்போ சொல்லு மதன், நான் உஷா கிட்ட இதை எப்படி சொல்ல முடியும்? அவ இதை எப்படி எடுத்துக்குவானு எனக்குத் தெரியலை " என்றேன்.

"சூரி சொல்றேனு தப்பா நினைக்காதே. எப்படி இருந்தாலும் இந்த விசயத்தை அவளுக்கு தெரியாம ரொம்ப நாள் மறைக்க முடியாது. அவளா தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி நீயே சொல்லிட்டா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். உங்க ரெண்டு பேரையும் நல்லா தெரிஞ்சவன்கிற முறையில சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம் " என்று சொல்லி விட்டு கீழே செல்வதற்காக எழுந்தான்.

மதன் சொல்வது தான் சரியென எனக்கும் பட்டது. உஷாவிடம் என் மனதில் இருப்பதைக் கொட்டும் நாள் வந்து விட்டது. ஆனால் எப்படி எங்கே ஆரம்பிப்பது என்று தான் குழப்பமாக இருந்தது. இருப்பினும் மனதில் இருப்பதை மதனிடம் இறக்கி வைத்ததால் மனம் கொஞ்சம் தெம்பாகவும், தெளிவாகவும் இருந்தது.இருவரும் திரும்ப அலுவலகத்த்திற்குள் நுழைந்தோம்.

அங்கே எங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள் உஷா. எங்களைப் பார்த்ததும்,

"எங்கடா ரெண்டு பேரும் போயிட்டீங்க. என் தலையே வெடிக்கற மாதிரி நியூஸ் ஒண்ணு ஜென்னி சொன்னா" என்று நிறுத்தி விட்டு எங்களைப் பார்த்தாள்.

என்ன என்பது போல நாங்கள் இருவரும் அவளை நோக்க

"அவ வேலையை ரிசைன் பண்ணிட்டாளாம், அதனால அடுத்த வார அவுட்டிங்க்கு இங்க இருக்க மாட்டாளாம். எவ்வளவோ தடவை காரணம் கேட்டும் ஏன் வந்த மூணு நாளிலேயே ரிசைன் பண்றானு சொல்லவே இல்லை " - ஒரு குழப்பத்துடன் என்னைப் பார்த்தவாறே சொல்லிய உஷாவின் பார்வையை ஒதுக்கி வைத்து விட்டு, மதனை நோக்கி திரும்பினேன்.

என்னைப் போலவே அதிர்ச்சியும், குழப்பமும் கலந்த பார்வையுடன் மதன் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

- தொடரும்.

கருத்துகள் இல்லை: