சனி, 4 ஆகஸ்ட், 2012

ஆகா என்ன பொருத்தம்!!!

"கெட்டி மேளம், கெட்டி மேளம் " ஐயர் உரக்கச் சொல்ல, சுற்றியிருந்த உற்றார், உறவினர் பூக்கள் தூவி வாழ்த்த, நாதஸ்வர நாதமும், மத்தள இசையும் மங்களகரமாக ஒலிக்க, பெற்றோர் கண்களை ஆனந்த கண்ணீர் நிறைக்க, இருவர் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயம் இனிதே துவங்கிய து. அதுவரை பொறுமை காத்த ஒரு சிலரும் பந்தியை நோக்கி நகர, எனக்கு இரண்டு வரிசை முன்னால் அமர்ந்திருந்த அவள் என் பார்வையில் விழுந்தாள்.

"ஒரு வேளை அவளாக இருப்பாளோ? " கூட்டத்தில் சரியாகத் தெரியவில்லை. இரண்டு நிமிட காத்திருப்பிற்குப் பின் புன்னகையுடன் திரும்பிய அவளைப் பார்த்ததும் என் மனதிற்குள் ஒரு இனம் புரியா குறுகுறுப்பு. கல்லூரியில் பார்த்த போது இருந்ததை விட இன்னும் கொஞ்சம் அழகும், பொலுவும் கூடி இருந்தது போலத் தோன்றியது. நெற்றி வகிட்டில் இருந்த குங்குமமும், தடிமனான தங்கச் சங்கிலியும் அவள் இன்னொருவனுக்குச் சொந்தம் ஆகி விட்டதை உறுதி செய்தது. அவளுடன் சென்று பேசலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

அப்போது அவளை நோக்கி சென்ற ஒருவன் தன் கையில் இருந்த கைக்குழந்தையை நீட்ட, "வாடா செல்லம்...அம்மாவை விட்டுட்டு இருக்க முடியலையா என் தங்கத்தாலே?" என்றவாறே வாங்கி முத்தமிட்டாள்.

அவனிடம், " என்னங்க நான் அப்பாவோட சாப்பிட்டுக்கிறேன். உங்களுக்கு டைம் ஆயிடுச்சு இல்ல. நீங்க சாப்பிட்டு கிளம்புங்க " என்றவாறே அவனது தலையிலும் விழுந்திருந்த சிறு பூக்களைத் தட்டி விட்டாள். அப்படி என்றால் அவன் தான் அவள் கணவனா? என்னால் நம்பவே முடியவில்லை. கரு கருவென்று, கன்னங்கள் ஒட்டிப் போய், அவளது நிறத்திற்கும் அழகிற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தான்.

"என்னங்க பந்திக்கு கூட்டம் அதிகமாகுது. நாமளும் போயி சாப்பிடலாமா? " கேட்ட என் மனைவியைத் திரும்பிப் பார்த்தேன். மகாலட்சுமி போல மங்களகரமான தோற்றத்துடன் பட்டுப் புடவையும், தங்க நகைகளும் அவளது அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற, தங்க விக்கிரகம் போல ஜொலித்தாள். இப்படி ஒரு அழகி எனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணி என்றும் போல இன்றும் பெருமிதத்தில் என் முகத்தில் புன்னகை பூத்தது.

"நீ உன் அம்மாவோட போ. நான் பின்னாடி வரேன் " என்று என் துணையை அனுப்பி விட்டு அவளை நோக்கி நகர்ந்தேன். குழந்தையைக் கொஞ்சி கொண்டு இருந்த அவள் என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டாள்.

ஆச்சர்யத்தில் கண்கள் விரிய, " வாவ் வாட் எ சர்ப்ரைஸ்!. உன்னை இங்க பார்ப்பேனு நினைச்சு கூடப் பார்க்கலை. எப்படி இருக்கே? " என்று நலம் விசாரித்தாள்.

"நான் நல்லா இருக்கேன். எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு. நாம கடைசியா பார்த்து ஒரு 5 வருசம் இருக்குமா? " என்று கேட்டேன்.

"இவனுக்கே 5 வயசு ஆச்சு. அதுக்கு முன்னாடி ரெண்டு. ஏழு வருசம் ஆச்சு " என்றாள்.

"காலம் எவ்வளவு வேகமா ஓடுதுனு பார்த்தியா? நேத்து தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு  அதுக்குள்ள..." என்று வியந்தேன்.

"ஆமா...அப்புறம் வீட்டிலிருந்து வந்திருக்காங்களா? " என் பின்னால் அவள் கண்கள் தேடியது.

"அதோ அந்த மெரூன் கலர் புடவை கட்டிட்டு ரெண்டாவது டேபிள்ல இருக்கா பாரு. அவதான் " நான் கை காட்டிய இடத்தில் பார்த்த அவள்,

"வாவ்..ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்காங்க. உனக்கு ஏத்த ஜோடியா தான் பார்த்து இருக்க" என்று பாராட்டினாள்.

"அதோ அங்க நீல சட்டை போட்டுட்டு ஜாமூன் சாப்பிட்டுட்டு இருக்காரே, அவர் தான் என் வீட்டுக்காரர் " அவள் காட்டிய திசையில் அவனே தான்.

"சொல்றேனு தப்பா எடுத்துக்காதே. உன் அழகுக்கு எவ்வளவு பேரு நீ, நான்-னு போட்டி போட்டுட்டு வந்திருப்பாங்க. உனக்கு எந்த  விதத்திலயும்  பொருத்தமே  இல்லாத தப்பான ஆளைத் தேர்ந்தெடுத்திட்ட" என்று நான் சொல்ல புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

"ஆனா ஒண்ணு, அன்னைக்கு நான் உன்கிட்ட சவால் விட்ட மாதிரியே உன்னை விட அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுன நான் தான் ஜெயிச்சேன்" என் முகத்தில் வெற்றிப் பெருமிதம் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது.

"நீ ஜெயிச்சதுல எனக்கும் சந்தோசம் தான் " புன்னகை மாறாமல் பதில் அளித்தாள். அவள் ஒத்துக் கொண்ட சந்தோசமே போதுமானதாக இருந்தது.

" சரி எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன் " சொல்லிவிட்டு கிளம்ப முயல.

"இரு என் வீட்டுக்காரரை அறிமுகம் செஞ்சு வைக்கிறேன் " என்று அவன் அருகே அழைத்துச் சென்றாள். என் பெயரைக் கேட்டதுமே ஒரு கேள்விக்குறியுடன் அவளை நோக்க, அவளும் "ஆமாம்" என்பது போல பார்வையாலேயே பதிலளித்தாள். ஒரு ஐந்து நிமிட பேச்சிற்குப் பின்

" உங்களை மீட் பண்ணுணதுல ரொம்ப சந்தோசம். ஆபிஸ்கு டைம் ஆயிடுச்சு. அவசியம் ஒரு நாள் வீட்டிற்கு வரணும்" என்று விடை பெற்றான்.

"அவரை அனுப்பிச்சுட்டு வந்திடறேன் " என்று அவளும் கூடவே நகர்ந்தாள்.

சரி சாப்பிட செல்லலாம் என்று திரும்ப, அங்கு என் மனைவி. "யாரு அவ, ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தே? " அவள் முகம் கோபத்தில் இன்னும் சிவப்படைந்திருந்தது.

"அது வந்து..அவரு என் கூட வேலை பார்க்கிறவரு. அவங்க அவரோட மனைவி " உண்மையைச் சொன்னாள் என் நிலைமை என்ன ஆகும் என்று எனக்குத் தெரியும்.

"எதுக்கு அவரு இல்லாதப்ப அவ கூட பேசிட்டு இருந்தே? "சந்தேகப் பார்வையுடன் கேட்டாள்.

"இல்லை. அவரு எங்க இருக்காருனு விசாரிச்சிட்டு இருந்தேன் " என்று பொய்யை மெய்யாக்க முயற்சி செய்தேன்.

ஒரு நொடி என்னை உற்று நோக்கியவள் " ஆமா அதுதான் ரொம்ப முக்கியம். வீட்டுக்கு வா உன்னை வைச்சிக்கிறேன்" என்று கோபமாக நகர்ந்தாள்.

இது எனக்கு ஒன்றும் புதிது அல்ல.திருமணம் ஆன நாளில் இருந்து நாங்கள் சண்டை போடாத நாளே இல்லை. எங்களுக்குள் புரிதல் என்று ஒன்று இருந்ததே இல்லை.என் மனைவி வாசலைத் தாண்டிச் செல்லும் போது மீண்டும் அவள் என் பார்வையில் விழுந்தாள்.

"அப்பாவுக்கு டாட்டா சொல்லுடா செல்லம் " அவள் புன்னகையுடன் கை அசைக்க, அவள் கணவனும் சந்தோசமாக கையசைத்துச் செல்ல அவர்களின் அன்னியோன்யம் எனக்குள் சிறிது பொறாமையைத் தூண்டியது. என்னையும் அறியாமல் என் மனம் சொல்லியது "ஆகா என்ன பொருத்தம்!".

-முற்றும்.



கருத்துகள் இல்லை: