செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வாராயோ தோழி - பாகம் 1

"வந்துட்டேன் சவி சிக்னல்-ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் 2 நிமிசத்துல உன் வீட்டுல இருப்பேன்." - பேசிக் கொண்டு இருக்கும் போது கிரீன் சிக்னல் விழ ஃபோனை அணைத்து விட்டு சவிதாவின் வீட்டை நோக்கி எனது காரை செலுத்தினேன். அவள் வீட்டுக்கு செல்லும் இரண்டு நிமிடத்தில் என்னைப் பற்றி,

நான் தியாகு, இன்று உங்களது அமெரிக்க நண்பர் யாரேனும் ஒருவருடன் நீங்கள் போனில் பேசி இருந்தால் அதற்கு காரணம் நானும் ஒருவன். அமெரிக்காவின் முண்ணனி தொலை தொடர்பு அலுவகத்தில் முக்கிய பணி ஆற்றிக் கொண்டு இருக்கிறேன். இதோ இன்றோடு நான் அமெரிக்கா வந்து 3 வருடம் ஆகிறது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க நண்பர்களுடன் ஒரு ட்ரிப் அடிக்கலாம் என முடிவு செய்து இப்போது எனது நெருங்கிய தோழி சவிதாவை அழைக்க சென்று கொண்டு இருக்கிறேன்.

"தியாகு என்ன அதிசயம்! உண்மையாவே சொன்ன நேரத்துக்கு வந்துட்டே? " ஆச்சர்யத்துடன் என்னை சவி வரவேற்றாள்.

"இந்த முணு நாள்ல இன்னும் நிறைய ஆச்சர்யபடுற மாதிரி நடக்கும். கண்டுக்காதே ". அவளுக்கு ஒரு சிரிப்புடன் பதில் அளித்து விட்டு எனது கண்கள் அவளது  வீட்டுக்குள் யாரையோ தேடியது.

" நீ தேடற ஆள் இங்கே இல்லை. அவ Washingdon DC போயிட்டா." சவி எனது தேடலைப் புரிந்து பதில் அளித்தாள்.

"வாட்??? அவ நம்ம கூட Thousand Islands வரானு நீதானே நேத்து நைட் சொன்னே? "

"ஆமா, இன்னைக்கு காலைல ப்ளான் மாறிடிச்சு. அவ White House பார்த்ததே இல்லையாம். ஒரு குரூப் Washington போறாங்க. அவங்களோட அவ ஜாயின் பண்ணிக்கிட்டா"  இதைக் கேட்டதும் எனது முகம் சிறிது வாடியது. அதற்கு காரணம் அர்ச்சனா!!!.

அர்ச்சனா, எங்கள் டீமில் உள்ள அனைவரும்  கடலைப்  போடத்  துடித்துக்  கொண்டு  இருக்கும் அழகிய புது வரவு. எனது நல்ல நேரம் அவள்  சவியின்  ரூம் மேட் ஆக, என்னுடைய தொந்தரவு தாங்க முடியாமல் அர்ச்சனாவையும் இந்த டிரிப்பிற்கு அழைத்திருந்தாள் சவி. இந்த ட்ரிப்பில் அவளை இம்ப்ரெஸ் செய்து நெருங்கி விடலாம். பார்க்கறவன்   ஒவ்வொருத்தன்  வயித்துலயும்  புகையை கிளப்பலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தில் விழுந்த மண்ணினால் தான் என் முகம் வாடியது.

அப்போது கையில் ஒரு ஷாப்பிங் பேக் உடன் உள்ளே நுழைந்தாள் அர்ச்சனா. " சாரி சவி, கொஞ்சம் லேட் ஆயிடிச்சு, இதோ ரெண்டு நிமிசத்துல வந்திடறேன்" அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

சவி, "பரவாயில்லை, இன்னும் டைம் இருக்கு. பை தி வே, இது தியாகு, என்னோட பெஸ்ட் ப்ரண்ட்" என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.

"ஹலோ, நைஸ் டூ மீட் யூ" என்று கை குலுக்கினாள்.

"Pleasure" என்று நானும் கை குலுக்கினேன். அர்ச்சனா அவள் ரூம் உள்ளே நுழையும் வரைக் காத்து இருந்து விட்டு

"ஏய் லூசு, எதுக்கு பொய் சொன்னே?" என்று சவியின் தலையில் குட்டினேன்.

" வலிக்குதுடா பக்கி " என்று என் கையில் ஒரு குத்து விட்டவாறே  "ஆனாலும் அவ வரலைனு சொன்னதும் உன் மூஞ்சி போன போக்கை பார்த்து இருக்கணுமே" என்னை கிண்டல் செய்தாள் சவி.

அடுத்த 5 நிமிடத்துல அர்ச்சனா ரெடியாக, எனது இன்னொரு நண்பன் சந்துரு என்னை கால் பண்ணவும் சரியாக இருந்தது. அவனுடைய காரில் ட்ரிப் போவதாகத் தான் பிளான். அவன் கார் திடீரென ஸ்டார்ட் ஆகவில்லை என்றும் மெக்கானிக் ஷாப்பில் இருப்பதாக சொன்னான். எனது கார் வாங்கி இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதனால் எனது காரில் போக எனக்கு விருப்பமில்லை. அர்ச்சனா தான் அவளது கார் Rental கார் எனவும் அதனால் அவளது காரில் போகலாம் என்றும் சொன்னாள். நான் சந்துருவை வழியில் பிக்கப் பண்ணிக்குவதாக ஃபோன் செய்து சொல்லிவிட்டு நாங்கள் மூணு பேரும் கிளம்பினோம்.

"வாவ், Honda Civic. அர்ச்சனா, intermediate Class Rental a? " என்று கேட்டேன்.

"இல்லை, இது Economy class Rental தான். ஆனா என்னோட லக், அந்த டைம்ல Economy car  எதுவும் இல்லைனு எனக்கு இது கொடுத்தாங்க" என்று பெருமையாக அர்ச்சனா கூறினாள்.

நான், "உண்மையாவே நீ லக்கி தான். பொதுவா Nissan Versa னு ஒரு டப்பா கார் தான் கிடைக்கும்"

"ஓ, எனக்கு Nissan Versa பிடிக்கவே பிடிக்காது. அதை ஓட்டறதுக்கு நான் நடந்தே போவேன்." என்றாள்.

இதற்குள் சந்துரு இருக்கும் மெக்கானிக் ஷாப் வர, காரை நிறுத்தி அவனையும் ஏற்றிக் கொண்டு எங்களது ட்ரிப்பை இனிதே துவங்கினோம்.

"மச்சி, இப்போ தான் நியூ சாங்க்ஸ் எல்லாம் என் ஐ-பாட் ல போட்டு இருக்கேன். இந்த ட்ரிப் பூரா கும் கும்னு பாட்டு கேக்கலாம்" என சந்தோசமாக தனது ஐ-பாட் ஐ வெளியே எடுத்தான்.

"என் கார்-ல FM தவிர வேற எதுவும் வொர்க் ஆகாது " என்று அர்ச்சனா குண்டைத் தூக்கிப் போட்டாள்.

அதற்கு சவி, "என்னது? மூணு நாள் ட்ரிப் நம்ம தமிழ் பாட்டு கேக்காமயா? சான்சே இல்லை "  என்றாள்.

"ஆமாம், FM நம்பி எல்லாம் ட்ரிப் போக முடியாது. நாம ரெண்டல் ஆபிஸ்  போயி கார் மாத்திட்டு போயிடலாம்" என்றேன்.

"வேண்டாம், அங்க போனா எனக்கு மறுபடி சிவிக் கிடைக்காது. எனக்கு இந்த கார் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று அர்ச்சனா மறுத்தாள்.

"அர்ச்சனா, நீ என் பவர் தெரியாம பேசறே. நான் Hertz -ல Platinum Member. நான் போனா அந்த மேனேஜர் எந்திருச்சி நின்னு தான் பேசுவார். அந்த அளவுக்கு என் மேல அவருக்கு மரியாதை. கவலைப் படாதே, உனக்கு இதை விட நல்ல காரா வாங்கித் தரேன்" என்று பந்தாவாக பேசி வண்டியை ஹெர்ட்ஸ் ரெண்டல் ஆபிஸ்-க்கு திருப்பினேன்.

ஒரு மணி நேரம் கழித்து எங்களது காரில், "வொய் திஸ் கொலைவெறி" என்று பாடல் ஒலிக்க சந்துருவும், சவியும் சந்தோசமாக கூட சேர்ந்து பாடிக் கொண்டு இருந்தனர். நான் அமைதியாக வண்டி ஓட்ட, அர்ச்சனா என்னை கோபமாக முறைத்துக் கொண்டு இருந்தாள். காரணம் நாங்கள் இப்போது இருப்பது "Nissan Versa" கார்!

"மச்சி, என்ன சொன்னே, அந்த மானேஜர் நின்னுட்டு தான் பேசுவாரா? அப்ப உன்னை ஆபிஸ்-க்கு உள்ள நிக்க கூட விடாம நாய் விட்டுத் துரத்துனது யாருடா? " - சந்துரு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுனான்.

"சரி ஃப்ரீயா விடு மச்சி, அந்த மானேஜர் விட்ட டோஸ்ல அவனே நொந்து நூடுல்ஸ் ஆயிப் போயி இருக்கான்.  " - சவி எனக்கு சப்போர்ட் ஆகப் பேசினாள்.

அதற்கு சந்துரு, "அதெல்லாம் சரி, நடுவில அந்த ஆளு, IBM Employee இல்லை சாம் ஆண்டர்சன் வந்து கேட்டாலும் இந்த காரைத் தான் தருவேனு சொன்னானே. சாம் ஆண்டர்சன் அமெரிக்கா அளவுல ஃபேமஸ் ஆயிட்டானா? " என்று கேட்டான்.

"அடப்பாவி, சாம் ஆண்டர்சன் இல்லைடா, அவரு சாம் பால்மிசானோ-னு சொன்னாரு. அவரு தான் நம்ம கம்பெனியோட CEO" என்று சொல்ல இருவரும் சிரித்தனர். அப்போது நானும், அர்ச்சனாவும் அமைதியாக இருக்க

சவி, " கம் ஆன் கைய்ஸ், இப்படி நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருந்தா நாம ட்ரிப் போறோமா? இல்லை அன்னா ஹசாரே போராட்டத்துக்கு போறோமானு எனக்கு சந்தேகமா இருக்கு? " என்றாள்.

நான் அர்ச்சனாவிடம் திரும்பி, " சாரி அர்ச்சனா" என்றேன். அதற்கு அவள் பதில் அளிக்காமல் அவள் முகத்தை திருப்பி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஆரம்பமே இப்படி என்றாள், இந்த ட்ரிப் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்துடன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.

-தொடரும்.

கருத்துகள் இல்லை: