செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வாராயோ தோழி - பாகம் 2

அடுத்த நாள் காலை, கார் பார்க்கிங்கில் நானும் சந்துருவும் காத்திருக்கையில் சவியும், அர்ச்சனாவும் காரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

"அம்மா தாயே, ரெடி ஆக இவ்வளவு நேரமா? " சந்துரு இருவரையும் பார்த்து கேட்டான்.

நான் சந்துருவிடம் திரும்பி, "இந்த பொண்ணுக மேக்கப் போட்டு முடிக்கிற நேரத்துல, ஒரு 20-20 கிரிக்கெட் மாட்சே நடத்தி முடிச்சிடலாம் மச்சி" என்று சொல்ல, அவன் சிரித்துக் கொண்டு Hive-Five செய்ய கை உயர்த்தினான்.

"நான் சீக்கிரம் ரெடி ஆயிட்டேன். அர்ச்சனா தான் லேட் பண்ணிட்டா" என்று சவி சொல்ல, சந்துருவிடம் High-five செய்ய உயர்த்திய கையை உடனே பின் வாங்கினேன்.

அப்போது காரின் பின் சீட்டில் இருந்த அர்ச்சனா கட் செய்த ஆப்பிளை சந்த்ருவிற்கு கொடுத்து விட்டு, எனக்கும்  ஒரு சிறு புன்னகையுடன் நீட்டினாள். அதைப் புன்னகையுடன் நான் வாங்க,

"பார்ரா, டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இந்த டிரிப்ல அடிச்சுகுவாங்கனு பார்த்தா, இப்பவே ரெண்டும் சமரசம் ஆயிடிச்சு " - சவி கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

"அர்ச்சனா, அவனுக்கு ஆப்பிள் கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு நிமிசம் உன் அழகான ப்ளூ கலர் சிவிக் காரை நினைச்சுப் பாரு. அவன் உன் காரை காணாம போக வைச்ச துரோகி"  ஒரு எக்ஸ்ட்ரா ஆப்பிள்காக சந்துரு அவனது பரட்டை வேலையை ஆரம்பித்தான்.

"இப்படி எல்லாம் பேசி என் கிட்ட நீ ஆப்பிள் வாங்க முடியாது. கார் போனா போகட்டும். அவன் என்ன வேணும்னா பண்ணினான்? நான் தான் நேத்து கொஞ்சம் ஒவரா ரியாக்ட் பண்ணிட்டேன். சாரி தியாகு" அர்ச்சனா சொன்னதைக் கேட்டதும் என் முகத்தில் 1000 வாட்ஸ் புன்னகை ஒளிறியது.

"ரைட்டு நீங்க ரெண்டு பேரும் முஸ்தபா ஆயிட்டீங்க. இந்த சந்தோசத்தை நாம ஆப்பிள் வெட்டிக் கொண்டாடலாம்"  என்று சந்த்ரு உற்சாகமாகக் கூறினான்.

அதற்கு சவி, "சுத்தி சுத்தி ஆப்பிள்லயே குறியா இருக்கான் பாரு. ஆனா ஆப்பிள் முடிஞ்சு போச்சு.உன் பேட் லக் " என்றாள்.

" மச்சி பொண்ணுக கிட்ட ஆப்பிள் போனாலே பிரச்சனை தான்.  ஆதாம் ஏவாள் காலத்துல ஆரமிச்ச ஆப்பிள் பிரச்சனை இன்னைக்கு வரைக்கும் முடியலை பாரு. இந்த மாதிரி பிரச்சனை வரும்னு தான் நானும் கொஞ்சம் எடுத்து வைச்சிருக்கேன். என் பேக்ல இருக்கும் பாரு " என்று நான் சொல்ல அர்ச்சனா எனது பேக்-ஐ ஆப்பிள் எடுக்க திறந்தாள்.

"வாவ். ஒரு ஃப்ருட் ஸ்டாலே உன் பேக்ல இருக்கும் போல!!! " உள்ளே இருந்த பழங்களைப் பார்த்ததும் அர்ச்சனா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

" கூடவே ஒரு பேக்கரியும் இருக்கும் பாரு. காலைல இவன் ஹோட்டல்ல இருந்து எடுத்த ஐட்டத்தை மட்டும் யாராவது பார்த்திருந்தா, ஃப்ரீ பிரேக்ஃபாஸ்ட்னு இனி எந்த ஹோட்டல்லயும் போர்ட் வைக்க மாட்டான் " சந்துரு கிண்டலாகக் கூற அனைவரும் சிரித்தனர்.

அர்ச்சனா என்னை ஒரு கேள்விக் குறியுடன் நோக்க, " இன்னைக்கு சவி விரதம். அவ ஈவ்னிங் தான் சாப்பிடுவா. நாம போற எடத்துல ஏதாச்சும் கிடைக்குமானு தெரியாது. அதனால தான் அவளுக்காக எடுத்து வைச்சு இருக்கேன் " என்று கூறினேன்.

"எப்பவும் போல, யூ ஆர் சோ ஸ்வீட் தியாகு " என்று சவி சொல்ல என்  ரியர்  வியூ மிரரில் என் பார்வைப் பதிந்தது. அதில் அர்ச்சனா  என்னையே  பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் என் மனம் துள்ளியது.  அவள் பார்வையில் இருந்த வித்தியாசத்தை நான் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்த அரை மணி நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் அனைவரும் காரில் இருந்து இறங்கி ஃபெர்ரியில்(Ferry) ஏறினோம். சின்ன சின்னத் தீவுகளாக அங்கு ஆயிரக்கணக்கான தீவுகள் இருக்க அந்த ஃபெர்ரியின் கேப்டன் சில முக்கியத் தீவுகளின் பெயரையும், அதன் வரலாறையும் அறிவித்துக் கொண்டே செல்ல, சவியும், அர்ச்சனாவும்  ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர். சந்துரு வழக்கம் போல அங்கு இருந்த அமெரிக்கப் பெண் குட்டிகளிடம் பீட்டர் விட்டுக் கொண்டிருக்க, நான் ஒரு மூலையில் நின்று அமைதியாக இயற்கை அழகில் ஒன்றிக் கொண்டு இருந்தேன்.

" என்ன மெர்மெய்ட் ஏதாச்சும் தெரியுதா? தனியாப் பார்த்து ரசிச்சுட்டு இருக்கே? "  குரல் கேட்டு திரும்பினேன். காற்றில் கட்டுப்பாடன்றி கலைந்து பறந்து கொண்டிருந்த கூந்தலை ஒரு கையால் சரி செய்தவாறே என்னை நோக்கி அர்ச்சனா வந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்து விட்டு அவளை நோக்கி திரும்பி நின்றேன்.

எனக்கு அருகில் வந்து நின்ற அவளைப் பார்த்து "என்ன ஃபோட்டோ செசன் எல்லாம் முடிஞ்சிச்சா? " என்றேன்.

"இன்னும் நிறைய மிச்சம் இருக்கு. ஃபேஸ்புக்-க்கு ஒரு நல்ல ப்ரொபைல் பிக்சர் கிடைக்கற வரை எடுத்துத் தள்ளிட்டே இருப்போம்ல" என்று சிரித்தவாறே கூறினாள்.

"எடுக்கற ஃபோட்டோஸ் லாம் பார்த்தா ஃபேஸ்புக்-க்கு எடுக்கற  மாதிரி  தெரியலையே, மேட்ரிமோனியல்-க்கு எடுக்கற மாதிரி இல்லை இருக்கு" அவளை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தேன்.

"என்னைப் பார்த்தா உனக்கு அப்பா அம்மாக்கு அந்த வேலை லாம்  வைக்கிற பொண்ணு மாதிரியா தெரியுது? " ஒரு குறும்புடன் கேட்டாள்.

"ஓ கதை அப்படிப் போகுதா? ஆள் எல்லாம் ஆல்ரெடி ரெடியா? " என்று கேட்டேன். அவள் "நோ" என்று பதில் சொல்ல வேண்டும் என்று அந்த நொடியில் மனதில் தோன்றிய அனைத்து தெய்வத்தையும் வேண்டினேன்.

"அது எல்லாம் எப்பவோ ரெடி. ஆனா ஒரு சின்ன பிரச்சனை அது முடிஞ்சதும் சீக்கிரம் கல்யாணம் தான்" என்றாள்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் என் மனதில் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்து விட்டு, " என்ன அவங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டீங்கறாங்களா? அட்ரஸ் சொல்லு அவனை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்" என்றேன்.

"அம்மா, அப்பா பிரச்சனை இல்லை. அவன் வொய்ஃப் ஜோதிகா தான் பிரச்சனை. அவளை உன்னால முடிஞ்சா தூக்கிடு" என்றவாறே சிரிக்க, அவளுடன் நானும் சேர்ந்து சிரித்தேன்.

"அதுதான் அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு இல்லை. இன்னும் அவனை விட மாட்டீங்களா? அப்படி என்ன தான் அவன் கிட்ட இருக்கு? பொண்ணுகளுக்கு  தமிழ் நாட்டுல வேற யாரையுமே கண்ணுக்கு தெரியாதா? " என்று அனைத்து தமிழ் ஆண்கள் மனதில் இருக்கும் அந்த கேள்வியைக் கேட்டேன்.

"அந்த கண்ணு ஒண்ணே போதும் எத்தனை வருசம் ஆனாலும் அவன் பின்னாடி அலைய வைக்க. அதுவும் இல்லாம அவனோட சிக்ஸ் பேக்..ஓ வாவ். அந்த மாதிரி சிக்ஸ் பேக் வைச்சு இருக்கிறவன் ஒருத்தனாப் பார்த்து தான் லவ் பண்ண போறேன். " என்றாள்.

"இந்த சூர்யா ஒருத்தனால தமிழ் நாட்டுல எத்தனை பையனுகளுக்கு பிரச்சனை" என்று அவனை மனதிற்குள் எல்லா கெட்ட வார்த்தைகளாலும் திட்ட ஆரம்பித்தேன். அதே சமயம் அவளுக்கு பாய் பிரெண்ட் யாரும் இல்லை என்று அறிந்ததில் சிறிது சந்தோசம் அடைந்தேன்.

"சார் எப்படி, அப்பா அம்மாக்கு வேலை வைக்கிற ஐடியா இருக்கா? இல்லை ஆல்ரெடி ஆள் பார்த்தாச்சா" என்று என்னைத் திரும்பக் கேட்டாள்.

"அப்பா அம்மா பார்க்கிறது எல்லாம் போன தலைமுறையோட போச்சு. ஒரு பொண்ணைப் பார்த்து பேசி, மயங்கி கிறங்கணும், அவ பின்னாடியே அலை அலைனு அலையணும், அவ இல்லைனா உலகமே இல்லைனு தோணனும். அப்படி ஒரு பொண்ணுக்காகத் தான் வெயிட்டிங்" என்று பதிலளித்தேன்..

சில நொடிகள் இடைவெளி விட்டு, "ஆனா சீக்கிரம் அப்படி ஒரு பொண்ணைப் பார்த்துடுவேனு நம்பிக்கை வந்துருச்சு" என்று அவள் கண்களைப் பார்த்தாவாறே சொன்னேன்.

என்னை சில நொடிகள் பார்த்தவள், என்னை நோக்கி இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள். என் காதருகே வந்து, " நானும் டும் டும் டும் படம் பார்த்துட்டேன். வேற ஏதாச்சும் டயலாக் சொல்லு"  என்று சொல்ல, அதற்கு இருவரும் இணைந்து சிரித்தோம். எங்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி உருவாகிக் கொண்டு இருந்தது.

அப்போது எங்களை நோக்கி வந்த சவி, " ஹே, எனக்கு இந்த லொக்கேசன் பேக் ரவுண்ட்ல ஒரு போட்டோ எடுத்துக் கொடு" என்று கேமராவை என் கையில் கொடுத்து விட்டு போஸ் கொடுத்து நின்றாள்.

அவளுக்கு போட்டோவை எடுத்து விட்டு, அந்த படத்தைப் பார்த்த நான், " ஒரு மொக்கை கேமரா வைச்சு இருக்கே நீ. இவ்வளவு கேவலமான கேமராவை நான் பார்த்ததே இல்லை. கொஞ்சம் கூட க்ளாரிட்டியே இல்லை. ஜூமும் சரி இல்லை. எங்கே குப்பைத் தொட்டில இருந்து எடுத்தியா இதை? " என்று கிண்டல் பண்ண.

எனக்கு அருகில் இருந்த அர்ச்சனா என் கையில் இருந்த கேமராவைப் பிடுங்கி விட்டு கோபமாக நகர்ந்தாள். எதுவும் புரியாமல் நான் சவியைப் பார்க்க

"அது அவ கேமராடா " என்று என்னிடம் சொல்லிவிட்டு அர்ச்சனாவை நோக்கி சவி நடந்தாள்.

" உனக்கு வேற எதிரி யாருமே வேண்டாம். உன் வாய் ஒண்ணே போதும். ஓட்டை வாய்டா தியாகு உனக்கு" என்று என் மனசாட்சி என்னைத் திட்ட, கோபமாகப் போகும் அர்ச்சனாவைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

-தொடரும்.



கருத்துகள் இல்லை: